விவசாயப் பயிர் காப்பீடு வழங்க ரூ. 2000 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு தகவல், விவசாயிகளுக்கு 50% மானியத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் விநியோகம், வேளாண் தொழில்களுக்கு நிதியுதவி அறிவிப்பு: மத்திய அமைச்சர் தகவல், மாப்பிள்ளை சம்பா அரிசிக்குப் புவிசார் குறியீடு: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல், பழங்குடியினப் பகுதிகளின் முன்னேற்றத்திற்கு ரூ. 85,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல் முதலான வேளாண்மை தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.
விவசாயப் பயிர் காப்பீடு வழங்க ரூ. 2000 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு தகவல்
பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்குப் பிரிமியம் மானியம் வழங்க சுமார் ரூ.2,000 கோடியைத் தமிழக அரசு அனுமதித்துள்ளது. பயிர் இழப்பு ஏற்பட்டால், மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதோடு, குறுவை பயிர் தவிர்க்கப்பட்டதற்கான காரணங்களில், பயிர் நஷ்டம் ஏற்படுவதனைத் தடுக்கவும் இவ்வறிவிப்பு வெளிவந்துள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 2042 கோடியில், விவசாயப் பயிர்களுக்கு சுமார் 1990 கோடியும், தோட்டக்கலை பயிகளுக்குச் சுமார் 50 கோடியும் ஒதுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கு 50% மானியத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் விநியோகம்
பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், 50 சதவீத மானியத்தில் அந்த நெல் ரகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜா பாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங் களில், ஒரு லட்சம் விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் சிறுகாவேரி பாக்கம் மாநில விதைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கும் துாயமல்லி மற்றும் சீரக சம்பா விதை நெல்லை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வினியோகம் செய்யும் பணியை வேளாண்துறை துவக்கி உள்ளது. ரூ. 25 க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பாரம்பரிய ரக நெல் ரூ. 12.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறாக ஒரு விவசாயி 20 கிலோ வரை பாரம்பரிய நெல் ரகங்களை வாங்கிச் செல்லலாம் எனக் கூறப்படுகிறது.
வேளாண் தொழில்களுக்கு நிதியுதவி அறிவிப்பு: மத்திய அமைச்சர் தகவல்
மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல் சாதனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் புதிய கட்டத்தினை மாகாராஷ்டிரா மாநிலம் புனே-வில் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை மந்திரி ஜிடேந்திர சிங் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பேசிய அவர், பாசன மேலாண்மையை எளிதான, நம்பகமான மற்றும் திறன் வாய்ந்ததாக மாற்றி அதிக விளைச்சல் தரக்கூடிய தொழில் நுட்பத்தை வழங்கவும், அனைத்துப் பருவ நிலைகளிலும் தாக்குபிடிக்கக் கூடிய பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்களை உருவாக்கவும் தொழில் நுட்ப நிறுவங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மாப்பிள்ளை சம்பா அரிசிக்குப் புவிசார் குறியீடு: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த பொருட்களின் கண்காட்சி விற்பனை சென்னை அண்ணாநகரில் நடந்து வருகிறது. இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்த தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தின் 43 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்றும், அவற்றில் நாதஸ்வரம், நாச்சியார்கோவில் விளக்கு, ஓவியம், தலையாட்டி பொம்மை என 10 பொருட்கள் தஞ்சாவூரைச் சேர்ந்தவை எனவும் கூறியுள்ளார். அதோடு இன்னும் 24 பொருட்களுக்குக் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளதாகவும், அவற்றில் நம் தமிழகத்தின் அரிசியான ”மாப்பிள்ளை சம்பா” அரிசியும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.
பழங்குடியினப் பகுதிகளின் முன்னேற்றத்திற்கு ரூ. 85,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல்
பழங்குடியினச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு என, திறன் பயிற்சி அளிக்கும் கிராமிய உத்யாமி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் 2-வது கட்ட நிகழ்வு ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய பழங்குடியனர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, பழங்குடியின மக்களின் நீடித்த வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் விதமாகப் பழங்குடியினப் பகுதிகளின் முன்னேற்றத்திற்காக, மத்திய அரசு ரு..85,000 கோடியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்நல்வாய்ப்பினைப் பழங்குடியின இளைஞர்கள் சரிவரப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உடற்பயிற்சி அவசியம்: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற Happy Streets நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா, சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை பெருநகர காவல்துறை ஆகியன இணைந்து நடத்தும் Happy Streets நிகழ்ச்சியின் ஒரு பகுதி நேற்று சென்னை அண்ணா நகரில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு உற்சாகப்படுத்திய மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றுலிருந்து அவர் விரைவில் குணமடைந்ததற்குக் காரணம் உடற்பயிற்சி என்றும், அதனால் அனைவரும் நேரம் கிடைக்கும்பொழுது உடற்பயிற்சி செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
டிஜிட்டல் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறைகள் என்னென்ன?
50% மானிய விலையில் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள் விநியோகம்
Share your comments