கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 29- வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் சிறந்த அரங்குகள் அமைத்த அலுவலர்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறந்த மா உற்பத்தி விவசாயிகளுக்கு ஆட்சியர் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் பரிசு வழங்கி கௌரவித்தனர்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 29-வது அகில இந்திய மாங்கனிகண்காட்சி கடந்த 05.07.2023 முதல் நேற்று 07.08.2023 வரை தொடர்ந்து 33 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் பொழுது போக்கு அம்சமாக இந்த மாங்கனி கண்காட்சியில் தினந்தோறும் கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கும் அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிந்துக்கொள்ளும் வகையில் அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தோட்டக்கலைத்துறை சார்பாக அனைத்து வகையான மா ரகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. 32 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியை நாள்தோறும் பொதுமக்கள் மற்றும் விவசாய பெருமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் என 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் நறுமணப்பயிர்கள் சுமார் 99,150 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அவற்றில் மா மட்டும் 81,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 2.60 இலட்சம் மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மொத்த மா உற்பத்தியில் 1.20 லட்சம் மெட்ரிக்டன் மாம்பழ கூழ் உற்பத்திக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெங்களூரா, அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், மல்கோவா, காலப்பாடு, ரூமானி, செந்தூரா, சேலம் பெங்களுரா, இமாபசந்த் மற்றும் மல்லிகா ஆகிய இரகங்கள் பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் உள்ள சுமார் 25 மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழ கூழ்கள் சவுதி அரேபியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஈரானி மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு ரூபாய் 125.00 கோடி அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் குடிசைத்தொழில் மூலமாக மா பழச்சாறு ஜாம், ஜெல்லி மற்றும் ஊறுகாய் தயார் செய்து வணிகம் செய்யப்படுகிறது.
இம்மாங்கனி கண்காட்சி மூலம், இந்தியாவின் பல மாநிலங்கள், பல மாவட்டங்களில் இருந்து மா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பங்கு பெற்றதால், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அனுபவங்களை பரிமாற்றம் செய்து கொள்ள ஏதுவாக அமைந்தது.
நிறைவு விழாவினை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பாக 16 மா உற்பத்தி செய்யும் விவசாயிகள், அனைத்து அரசுத்துறைகள் சார்பில் அரங்கு அமைத்த 32 துறை அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் காண்க:
பட்டென்று சரிந்த தக்காளி விலை- மதுரை, திருப்பூர் மார்கெட் நிலவரம்
மல்லிகை, சம்பங்கி போன்ற உதிரி மலர் சாகுபடிக்கு 40 % மானியம்!
Share your comments