தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8-ந் தேதி புயலாக உருவெடுத்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு ‘அசானி’ புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று (புதன்கிழமை) பிற்பகலுக்குள் காக்கிநாடா-விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்ப்பதாக, வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அப்போது, ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 95 கி.மீ. வேகம் வரையிலும், ஒடிசா கடலோர பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையிலும் பலத்த காற்று வீசும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஜமுந்திரி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், சென்னையில் இருந்து அந்தமான் புறப்படும் விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களின் வானிலை அறிக்கையும், இந்த பதிவில் காணலாம்.
மே 11,2022:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.
மே 12 முதல் 14 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை (weather conditions):
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு இன்றும் (மே 11, 2022), கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேநேரம், ஒடிசா, வட மேற்கு வங்க கடல் பகுதிக்கு (மே 12, 2022) நாளை செல்ல வேண்டாம் என அறுவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
குப்பைகளை பிரத்தெடுக்கவில்லை என்றால் ரூ. 5000 வரை அபராதம்
அமுதம் திட்டத்தை துவக்கி வைத்தார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Share your comments