
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடையக்கோட்டை, புல்லாக்கவுடனூர், மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், கள்ளிமந்தையம், பொருளுர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சிம்ரன் கத்திரிக்காய் எனப்படும் நாட்டு ரக கத்தரி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அமோக விளைச்சல் கண்டுள்ளது.
கூலி ஆட்களை கொண்டு விவசாய நிலங்களில் இருந்து கத்திரிக்காய் அறுவடை செய்து அதை தரம் பிரிக்கப்பட்டு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை மட்டுமே விற்பனை ஆனதால் அறுவடை கூலிக்கு கூட கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இது குறித்து காந்தி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் செயலாளர் ராசியப்பன் கூறுகையில், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரி, வெங்காயம், பூசணி, சுரைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து அதை தரம் பிரித்து அதிகளவு கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்புவோம். இந்நிலையில் மைசூரில் இருந்து அனைத்து வகையான காய்கறிகள் கேரளாவிற்கு அதிகளவு கொண்டு வருவதால் கேரளா வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வருவதில்லை.
இதனால் அதிக வரத்து இருப்பதால் சாரியாக விற்பனையாவதில்லை. இதன் காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்கள் இல்லாததாலும் காய்கறிகளின் தேவை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.
Read more:
Share your comments