தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைப்பெற்ற சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை ஒருமனதாக வலியுறுத்திடும் அரசின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
நடப்பாண்டு கர்நாடக அரசு காவிரி நடுவர் நீதிமன்றம் உத்தரவின்படி முறையாக நீர் திறந்துவிடாத காரணத்தினால் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி விவகாரம் இரு மாநிலங்கள் இடையே தீவிர பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனிடையே இன்று கூடிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது முதல்வர் காவிரி விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்தார்.
தீர்மானம் குறித்து முதல்வர் ஆற்றிய உரையின் சில முக்கியத்தகவல்கள் பின்வருமாறு-
இந்த ஆண்டில், 1 ஜூன், 2023 அன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்த 69.7 டி.எம்.சி நீரளவையும். தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு. 12.06.2023 அன்று மேட்டூர் அணையை குறுவை பாசனத்திற்காக திறந்து வைத்தோம். மேட்டூர் அணையின் நீர் இருப்பு 50 டி.எம்.சி. க்கும் மேலாக உள்ள போது. உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக, மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் நாள் திறப்பது வழக்கமாக உள்ளது. அதனை முறைப்படி திறந்து வைத்தோம்.
திறந்துவிடப்பட்ட நீரும் கடைமடைப் பகுதிகள் வரை சென்றடைந்தது. நமது வேளாண் பெருமக்களும் கடந்த ஆண்டுகளைப் போலவே குறுவைப் பயிரை இந்த ஆண்டும் சிறப்பாக பயிரிடுவதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டார்கள்.
இத்தகைய நிலையில் செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது. கர்நாடக மாநில அரசு நமக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்து விடவில்லை. இதனையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை சென்றோம். அதன்பின் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற தனது 75-ஆவது கூட்டத்தில் பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,000 கன அடி நீரை வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த அளவையும் விட குறைவாகவே கர்நாடகா தற்போது பில்லிகுண்டுலுவில் தண்ணீர் அளித்து வருவதால், தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலர் (நீர்வளத்துறை) காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தலைவர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கர்நாடக அரசு, ஆணையத்தின் உத்தரவைப் பின்பற்றாததை சுட்டிக்காட்டி உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாக இருந்து வரும் நிலையில், 5.10.2023 வரை, 90.25 டி.எம்.சி. நீர் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம், காவிரி டெல்டாவில் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக, முறைபாசனம் Turn system படி நீர் பங்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் எஞ்சியுள்ள நாட் களுக்கு நாம் நமக்கு உரிய நீரைப் பெற்று குறுவைப் பயிரையும், அடுத்து நடவு செய்யப்பட உள்ள சம்பா பயிரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுக்காத்திட உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என முதல்வர் தனது உரையில் தீர்மானம் தொடர்பாக உரையாற்றினார்.
முதல்வரின் உரையினைத் தொடர்ந்து தீர்மானத்தின் மீதான விவாதம் நடைப்பெற்றது. அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் காவிரி விவகாரம் மற்றும் தீர்மானம் தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ஏற்கெனவே தமிழக அரசு சார்பில் குறுவை சாகுபடி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
Election Date: 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு
Share your comments