1.தக்காளியை அழிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்ட விவசாயிகள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் அதற்கு போதிய விலை இல்லை. இதனால் தக்காளி பழத்தை பறிக்கும் ஆட்களுக்கு கூட சம்பளம் கிடைப்பதில்லை. எனவே சாகுபடி செய்த தக்காளியை அழிக்கும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
2.காய்கறி விலை குறைந்து வருகிறது
கடந்த சில நாட்களாக காய்கறி விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.72-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் நேற்று கிலோ ரூ.48-க்கும், ரூ.40- க்கு விற்கப்பட்ட புடலங்காய் ரூ.32 க்கும், ரூ.48-க்கு விற்கப்பட்ட பாகற்காய் ரூ.34- க்கும், ரூ.52-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ.30- க்கும,் ரூ. 24-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.14- க்கும் ரூ.48-க்கு விற்கப்பட்ட கொத்தவரங்காய் ரூ.34- க்கும் ரூ.58க்கு விற்கப்பட்ட மாங்காய் ரூ.32-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ், அவரைக்காய், இஞ்சி சற்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
3.மலிந்து கால்நடைகளுக்கு தீவனமான முருங்கை
தற்போது மார்க்கெட்டுகளுக்கு முருங்கைக்காய் வரத்து அதிகமாக உள்ளது. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு முருங்கைக்காய் வரத்து குறைவாக இருந்தது. இதனால் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.100 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.8 முதல் ரூ.12 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விலை சரிந்ததால் முருங்கைக்காய்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவுக்கு கூட வருவாய் கட்டுப்படியாவில்லை. இதனால் ஏராளமான விவசாயிகள் மரங்களிலேயே முருங்கைக்காய்களை பறிக்காமல் விட்டுள்ளனர். மேலும் சில விவசாயிகள் பறிக்கப்பட்ட முருங்கைக்காய்களை மாடுகளுக்கு உணவாக வழங்கி வருகின்றனர்.
4.தேங்காய் விலை கடும் வீழ்ச்சி
ரூ.10-க்கு தேங்காய் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.7-க்கு மட்டுமே கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். விலை குறைவால் பெரும்பாலான விவசாயிகள் தேங்காய் பறிக்காமல் மரத்திலேயே விட்டுள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:- வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் தேங்காய் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது வெளி மாநிலங்களில் தேங்காய் தேக்கம் அடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
5.ஜி-20' மாநாட்டையொட்டி டெல்லியில் 20 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்
ஜி-20' நாடுகளின் உச்சி மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதையொட்டி டெல்லியில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் 20 லட்சம் மரக்கன்றுகளை நட அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் 12 லட்சம் மரக்கன்றுகளை வனம் மற்றும் வனவிலங்குத் துறையும், மற்றவையை பிற நிறுவனங்கள் நடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.திண்டுக்கல் மாவட்டத்தில் பச்சை பயறு கொள்முதல்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் 290 மெட்ரிக் டன் பச்சை பயறு கொள்முதல் செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் ஆதார விலைத்திட்டத்தின் கீழ் (PSS) 2022-23- ஆம் ஆண்டின் ராபி பருவ காலத்தில் அறுவடை செய்யப்படும் பச்சை பயறு விளைப்பொருளை 01.03.2023 முதல் 29.05.2023 வரையிலான காலத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 290 மெ.டன் பச்சை பயறு கொள்முதல் செய்திட தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பச்சை பயறு 496 ஹெக்டேர் அளவில் பயிரிடப்பட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், ”ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், திண்டுக்கல் ரோடு, பழனி, (விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அலைபேசி எண்-8946099709)” என்ற முகவரியில் செயல்படும் விற்பனைக்கூடத்தில் பச்சை பயறு கொள்முதல் செய்யப்படுகிறது.
7.கீழடியில் ஆய்வு மீண்டும் தொடக்கம்
நான்காவது மற்றும் ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட கட்டமைப்புகளை இணைக்க 22 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாக மாவட்டத்தில் உள்ள தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் இருந்து வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்ததையடுத்து கீழடியில் முந்தைய அகழாய்வுப் பகுதிக்கு அருகே 22 சென்ட் பரப்பளவில் நிலம் தோண்டும் பணி தற்போது மேற்கொள்ளப்படும். கீழடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க
Share your comments