நாளை முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 500 கடைகள் எது என்பன குறித்த பட்டியல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அப்போதைய துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
மேற்படி அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாளிட்ட அரசாணை எண்.140-யினை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.
இந்நிலையில் அரசாணையினை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாளை முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் திமுக குறிப்பிட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றும் என முதல்வர் தெரிவித்திருந்தார். டாஸ்மாக் நிர்வாகத்தினால் தான் தமிழக அரசே இயங்குகிறது என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில், அதற்கு அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், சமீபத்தில் முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது பல்வேறு அறிவிப்புகள் துறை ரீதியாக வெளியிடப்பட்டன. அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விரைவில் தமிழகத்தில் 500 மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மூடப்படும் என அறிவித்தார். அறிவிப்புக்கு இணங்க பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகள் போன்றவற்றின் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைப்பெற்றன. இந்நிலையில் நாளை முதல் 500 மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில், வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,239 சில்லரை விற்பனை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சென்னை மண்டலத்தில் 138 டாஸ்மாக் கடைகளும், கோவை மண்டலத்தில் 78 கடைகள், மதுரை மண்டலத்தில் 125 டாஸ்மாக் கடைகள், சேலம் மண்டலத்தில் 59 கடைகள், திருச்சி மண்டலத்தில் 100 டாஸ்மாக் கடைகள் என நாளை முதல் மொத்தம் 500 கடைகள் மூடப்பட உள்ளன.
சமீபத்தில் டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளில் கணினி முறையில் பில் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என அனைத்துத் தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கு மத்தியில் அமலாக்கத்துறை சோதனையின் நிறைவாக செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பொறுப்பிலிருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
5 மணி நேர இருதய அறுவை சிகிச்சை நிறைவு- செந்தில்பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கு?
Share your comments