பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளின் நெருக்கடிக்கு தீர்வு காண, பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது கோவை மாநகராட்சி. இதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாரட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன.
முதற்கட்டமாக, 20 லட்சம் ரூபாய் செலவில், பிளாஸ்டிக் ஷ்ரெடர் இயந்திரம் (plastic shredder machine) அமைக்க, கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. "குடியிருப்பு மக்கள் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் வழங்கும் போது மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என பிரித்து ஒப்படைக்க வேண்டும். உலர் கழிவுகளில் இருந்து கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அதனை துண்டுகளாக்கி, சாலைகள் அமைக்கும் போது பிடுமினுடன் கலக்கப்படும்," என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதல்கட்டமாக, சில சாலைகளை சோதனை அடிப்படையில் அமைக்க, 5% பிளாஸ்டிக்கில் பிடுமினுடன் கலக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் தெரிவித்தார். "முதற்கட்டமாக அமைக்கப்படும் சாலைகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, அதனை மதிப்பீடு செய்து அறிக்கையாக பெற முடியும்," என்று அவர் கூறினார்.
கிராமப்புறங்களில், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் சாலைகள் அமைப்பதற்கு 30% பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"பிளாஸ்டிக்கானது பிடுமினில் சேர்க்கப்படும் போது சாலைகள் நீண்ட காலம் நீடிக்கும். இது குப்பையில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க உதவும்" என்று கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறினார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட கோவை மாநகராட்சிக்கான பட்ஜெட்டில் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த முயற்சியை முன்னெடுக்கும் விதமாக 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக்கை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "பாதுகாப்பான அகற்றலுக்கான முதல் படி, பொது மக்கள் கழிவுகளை பிரித்து குப்பை சேகரிப்பவர்களிடம் ஒப்படைப்பதில் இருந்து தொடங்குகிறது. திறந்த வெளியில் குப்பைகளை வீசுவது நீர்நிலைகளுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் மண் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது." என தெரிவித்தார்.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும் பதப்படுத்தப்படாத குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து எடுக்க, பல கோடி ரூபாய் செலவழித்து வருகிறது பேரூராட்சி நிர்வாகம். "அவற்றில் இருந்து பிரிக்கப்பட்ட கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன, அங்கு அது நிலக்கரிக்கு பதிலாக மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது," என்று அதிகாரி மேலும் கூறினார்.
இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக நீக்க பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய, மாநில அரசுகளும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
ஒரு சில க்ளிக்கில் ஆன்லைனில் லோன்.. இதெல்லாம் யோசிக்காம வாங்காதீங்க
Share your comments