தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எர்ரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி -2023 முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி நேற்று துவக்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனடிப்படையில், நல்லம்பள்ளி வட்டம், எர்ரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி -2023 முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., நேற்று (01.03.2023) துவக்கி வைத்தார். நேற்று துவங்கிய இந்த தடுப்பூசி முகாம் வருகிற 21.03.2023 வரை தொடர்ச்சியாக 21 நாட்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள 3,46,400 பசு மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசியானது முகாம் மூலம் போடப்பட உள்ளது. இத்தடுப்பூசி பணி மேற்கொள்ள 3,46,400 டோஸ் கோமாரி நோய் தடுப்பூசி மருந்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கால்நடைக்கும் தனித்தனி ஊசி பயன்படுத்தப்படுகிறது.
இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விடுபாடின்றி தடுப்பூசி பணி மேற்கொள்ள 82 தடுப்பூசி பணி குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி 22.03.2023 முதல் 31.03.2023 முடிய மேற்கொள்ளப்படும். விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனையை அணுகவும்.
கோமாரி நோய் தடுப்பூசி பணி விடுபாடின்றி மேற்கொள்ள தொடர்புடைய துறைகளான ஆவின், வேளாண்மைத் துறை, வனத்துறை, மகளிர் திட்ட பணியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளை சார்ந்த பணியாளர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தடுப்பூசி பணி குறித்த விழிப்புணர்வு அனைத்து கால்நடை வளர்ப்போருக்கும் சென்றடையும் வகையில் விரிவான விளம்பரங்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய துறை பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு 100 சதவீதம் விடுபாடின்றி தடுப்பூசி பணி மேற்கொள்ளும் வண்ணம் விரிவான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி மருந்து முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் கால்நடைகளுக்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது கால்நடை வளர்ப்போர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் பசு மற்றும் எருமையினங்களுக்கு விடுபடாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.ரெ.சாமிநாதன், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் அ.கௌரம்மாள், துணைத்தலைவர் ஏ.காசிலிங்கம், கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் காண்க:
பூமி இன்னும் சூடாகுமோ? கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் 2022-ல் புதிய உச்சம்
சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிர்வாகம் தவறிவிட்டது- ஜி20 மாநாட்டில் மோடி உரை
Share your comments