சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-2-ல் ஓட்டுனர் இல்லா மெட்ரோ இரயில்களை உருவாக்க ரூ.269 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ஓட்டுனர் இல்லா மெட்ரோ இரயில்களை வழங்குவது தொடர்பாக 2022 நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் மேலும் ரயில்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.269 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
ஓட்டுனர் இன்றி மொத்தம் 36 மெட்ரோ இரயில்கள்:
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II இன் கீழ், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம்(ARE-03A) அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 946 கோடியே 92 லட்சம்மதிப்பில் (வரிகள் உட்பட), கடந்த ஆண்டு 2022, நவம்பர் 17-ஆம் தேதி வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 27.11.2023 துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ இரயில்கள் (மொத்தம் 30 பெட்டிகள்)என மொத்தம் 36 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ இரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு உள்ளிட்ட ஒட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.
இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ இரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம்-4-ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில்மெட்ரோ இரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவின் மிக உயர்ந்த பசுமை கட்டுமான திட்டமான IGBC சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்பில் உள்ள 40 மெட்ரோ இரயில்நிலையங்களுக்கும் பிளாட்டினம் மதிப்பீட்டின் மிக உயர்ந்த தரச்சான்றிதழைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
பப்பாளி பழத்தினை மதிப்பு கூட்டுமுறையில் காசு பார்க்கும் வழிகள்!
Share your comments