CASR-IFFCO கூட்டு முயற்சியில் 400 விவசாயிகளுக்கு வயல்வெளிகளில் ட்ரோன் மூலம் உரத்தினை தெளிக்கும் பயிற்சி வழங்கப்பட்டு, இலவசமாக ட்ரோன்களும் வழங்கப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சிக்கான மையம் (CASR- centre for aerospace research), மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில் அமைந்துள்ளது.
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் நிறுவனம் (IFFCO- Indian Farmers Fertiliser Cooperative Limited) மூலம் விவசாய நிலங்களில் உரங்களை தெளிப்பதற்கான பைலட் ட்ரோன்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த சுமார் 400 விவசாயிகளுக்கு CASR-ல் பயிற்சி அளிக்கப்பட்டு, IFFCO நிறுவனத்தினால் இலவசமாக ட்ரோன்கள் வழங்கப்படும்.
இத்திட்டம் குறித்து பேசிய CASR-ன் இயக்குனர் கே.செந்தில் குமார் தெரிவிக்கையில், “இப்பயிற்சித் திட்டத்தில் குறைந்தபட்சம் 400 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். 20 விவசாயிகளைக் கொண்ட ஒவ்வொரு தொகுதிக்கும் 10 நாட்கள் ஆளில்லா விமானங்களைக் கையாளவும், இயக்கவும் பயிற்சி அளிக்கப்படும். தொழில்துறை வளர்ச்சியினை வேளாண் துறையில் செயல்படுத்தும் விதமாக நானோ உரங்களை விளைநிலங்களில் ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” என்று கூறினார்.
மேலும் ”பயிற்சி முடித்தவுடன், விவசாயிகளுக்கு 10 ஆண்டு செல்லுபடியாகும் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமமும் வழங்கப்பட உள்ளது. IFFCO நிறுவனம் சமீபத்தில் நானோ யூரியாவினை திரவ வடிவில் அறிமுகப்படுத்தியது. இது வழக்கமான யூரியா உர மூட்டையினை விட விலை மலிவானது" என்றும் குமார் கூறினார்.
CASR ட்ரோன் பயிற்சிக்கு ரூ.45,000 கட்டணமாக நிர்ணயித்துள்ளது. விவசாயிகள் 15,000 ரூபாய் செலுத்தினால் போதும். மீதமுள்ள தொகையை IFFCO மற்றும் CASR ஏற்கும்.
ட்ரோன் மற்றும் நானோ உரங்களை வயலுக்கு எடுத்துச் செல்லத் தேவைப்படும் மின்சார மூன்று சக்கர வண்டிகளையும் IFFCO வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள IFFCO சதன் தலைமையகத்தில், IFFCO நானோ டிஏபி-யினை (திரவ) வெளியிடும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
”விவசாயிகளுக்கு 50 கிலோ எடையுள்ள டிஏபி பையின் விலை அரசின் மானியத்தில் ரூ.1350-க்கு விவசாயிகளுக்கு கிடைக்கிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள IFFCO -வின் ஒரு பாட்டில் நானோ (திரவ) டிஏபி உரம், வணிக விற்பனைக்கு (500 ml) ரூ.600-க்கு கிடைக்கும். இது தற்போதைய 50 கிலோ பைக்கு இணையானது. வழக்கமான டிஏபி-யுடன் ஒப்பிடுகையில் பாதி விலை என்பதால், விவசாயிகளுக்கு இது பெருமளவில் உதவும்” என அமித்ஷா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: ANI
மேலும் காண்க:
Share your comments