40% மானியத்தில் ட்ரோன்கள்: காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ட்ரோன் இயக்குதல் பயிற்சி, வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் மாநில உழவர் தின விழா, தமிழகத்தில் உழவர்கள் கூட்டம் கலந்துகொண்டார் மத்திய வேளாண் உழவர் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், அஸ்வகந்தா சாகுபடியைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சர்வதேச முருங்கை கண்காட்சி 2022 நவம்பரில் தொடக்கம், இன்றைய வானிலை தகவல்கள் ஆகிய வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
40% மானியத்தில் ட்ரோன்கள்: காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ட்ரோன் இயக்குதல் பயிற்சி!
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் அக்டோபர் 17-ஆம் நாள் திங்கள் அன்று “விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ட்ரோன் வயல்வெளி செயல் விளக்கம்” எனும் தலைப்பில் ட்ரோன் இயக்குதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் விவசாயிகள் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மத்திய அரசு ட்ரோன்களுக்கு 40% மானியத்தைக் கொடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 60% தொகையினை வங்கியில் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, விவசாயிகள் ட்ரோன் செயல்பாட்டுக்கு மாறி தொழில்நுட்பம் சார்ந்த விவசாயத்தினைப் பெருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் மாநில உழவர் தின விழா!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டினைக் கொண்டாடும் விதமாக உழவர்தின விழா நேற்று தொடங்கியது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் வந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவானது மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதில் அதி நவீனத் தொழில் நுட்பங்கள், விவசாயத் திட்டங்கள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்தும் தொழில்நுட்பங்கள், விவசாயிகளின் செயல்திறனை மேம்படுத்தும் வகையிலான செயல் விளக்கங்கள், பயிர் விதைகள், நாற்றுக்கள், பண்னை இயந்திரங்கள், உயிர் உரங்கள் ஆகியன விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உழவர்கள் கூட்டம் கலந்துகொண்டார் மத்திய வேளாண் உழவர் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர்!
கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மத்திய வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங்க் தோமர் தலைமையில் தமிழக உழவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தென்னை சாகுபடி பரப்பளவில் கோவை முதலிடத்திலும், தென்னை சாகுபடி 88,467 ஹெக்டேர் பரப்பிலும் உள்ளது எனவும், இங்குள்ள மக்கள் தென்னைத் துறையின் வளர்ச்சியிலும் விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர் எனவும் கூறினார். தென்னை வளர்ச்சி வாரியம் சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து மூன்றடுக்கு விவசாயிகள் குழு உருவாக்கப்பட்டு நன்முறையில் செயல்படுத்தப்படும் என்றார். இதில் விவசாயத்திட்ட அரங்குகள் திறப்பு மற்றும் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அஸ்வகந்தா சாகுபடியைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்!
திண்டுக்கல் மாவட்டத்தில் 200 ஏக்கர் தோட்டத்தில் அஸ்வகந்தா (Withania somnifera) என்ற மருத்துவ தாவர சாகுபடியைச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். திண்டுக்கல், மருத்துவத் தாவரங்களின் மையமாக மாற அஸ்வகந்தா சாகுபடி தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆந்திரா, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அஸ்வகந்தா அதிகளவில் பயிரிடப்பட்டு மருத்துவத்துக்கு அளிக்கப்படுகிறது. அது போலவே, திண்டுக்க-லிலிருந்தும் அஸ்வகந்தா நேரடியாக அரசு மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களுக்கு நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச முருங்கை கண்காட்சி 2022 நவம்பரில் தொடக்கம்!
இந்தியத் தொழில் கூட்டமைப்பு, CII Karur-Moringa international fair 2022 என்றழைக்கப்படும் சர்வதேச முருங்கை கண்காட்சி 2022 எனும் மூன்று நாள் கண்காட்சி வரும் நவம்பர் 4 ஆம் நாள் தொடங்குகிரது. இக்கண்காட்சிக்கு தமிழக வேளாண்-உழவர்நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். முருன்கையின் வளர்ப்பு, முருங்கையின் முக்கியத்துவம் மற்றும் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து இக்கண்காட்சி நடக்க இருக்கிறது.
இன்றைய வானிலை தகவல்கள்
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், முதலான மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, விவசாயிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை! வானிலை நிலவரம்!!
TNAU: தமிழக விவசாயிகளுக்கு விருதுகள்|தமிழகத்தில் இலவச மின்சாரம்
Share your comments