2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பி.டி.ஆர் இன்று தாக்கல் செய்தார். இந்தாண்டு பட்ஜெட்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டமானது வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கிய சில நிமிடங்களில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். நிதியமைச்சரின் பட்ஜெட் உரையினை தவிர்த்து மற்றவை அவை குறிப்பில் இடம்பெறாது என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக நிதித்துறையின் அமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்ற நிலையில் 3-வது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். அவற்றின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு-
மகளிர் உரிமைத்தொகை:
தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். செப்டம்பர் 15 ஆம் தேதி, அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் முதல்-அமைச்சரால் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும் 1,000 கோடி ரூபாய் செலவில் வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மக்களுக்கு மானியம் வழங்கும் இதர திட்டங்களுக்காக ரூ 5,000 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.4236 கோடி மதிப்புள்ள 4491 ஏக்கர்-கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் 400 கோவில்கள் புனரமைப்பு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பத்திர பதிவு கட்டணம் குறைப்பு:
யாரும் எதிர்ப்பாராத வகையில் பத்திர பதிவு கட்டணம் 4%-ல் இருந்து 2% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். சொத்துகளின் வழிகாட்டி மதிப்பை திருத்துவதற்காக குழு அமைக்கப்படும். சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்துக்கு ரூ. 5346 கோடி ஒதுக்கீடு. மேலும் 1 லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும். கண்ணாடி இழை இணைய தொடர்புக்கு ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் உள்ளிட்ட 4 நகரங்களில் ரூ. 410 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு. தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, கோவை, ஓசூர் TNTECH CITY அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகூர் தர்காவை மேம்படுத்த ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு. தொழில்துறைக்கு ரூ. 3268 கோடி நிதி ஒதுக்கீடு. பசுமை மின்வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ரூ. 100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். தமிழக அரசின் போக்குவரத்துத்துறையினை மேம்படுத்தும் வகையில் 1000 புதிய பேருந்துகள், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைப்போன்று சென்னை கோடம்பாக்கம்- பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் திட்டம் 2025-ல் நிறைவுப்பெறும் எனவும் பட்ஜெட் உரையில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
என்ன பங்காளி உங்க ஊர்லயும் மெட்ரோவா? பட்ஜெட்டில் மதுரை, கோவை மக்களுக்கு நற்செய்தி
Share your comments