காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற மார்ச் 10 ஆம் தேதி வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அட்மா திட்டம் (வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டம்) தமிழ்நாட்டில் 2005-06 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது மற்றும் அட்மா திட்டத்தின் வாயிலாக இதர துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.
அட்மா திட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, மீன் வளர்ப்புத்துறை, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து அவ்வப்போது விவசாயிகளுக்கு பயிற்சி, கண்டுனர்தல் சுற்றுலா, செயல்விளக்கங்கள், பண்ணைப்பள்ளி மற்றும் வெளிமாநில சுற்றுலாக்களின் மூலம் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் கற்றுதரப்படுகிறது. இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள தகவலின் விவரங்கள் பின்வருமாறு-
வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சி மார்ச் 10 அன்று காலை 9.30 மணியளவில் களியனூர் கிராமத்தில் உள்ள அரசு சாரா நிறுவனமான ஹேண்ட் இன் ஹேண்ட் அகாடமி ஃபார் சோசியல் என்டர்பிரனர்ஷிப் (Hand in Hand Academy for Social Entrepreneurship) கூட்டரங்கில் பாராம்பரிய உணவு பயிர்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கம் மற்றும் விவசாயிகள் மேளா நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரிய உள்ளூர் இரகங்களை காட்சிப்படுத்துவது, வேளாண் பல்கலைக்கழக இரகங்களை காட்சிப்படுத்துதல், விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், பராம்பரிய உணவு திருவிழா, வேளாண்மை உழவர் நலத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு பராம்பரிய நெல் சாகுபடி மற்றும் அங்கக முறை தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளின் சந்தேகத்திற்க்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
மேலும் பராம்பரிய நெல் சாகுபடி குறித்து விரிவான முறையில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இவ்விழாவில் விவசாயிகள் பராம்பரிய நெல் சாகுபடி குறித்த விரிவான விளக்கம் பெற்று செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைத்து விவசாயிகளும் தங்கள் பகுதியில் விளையும் சிறந்த பண்புகளைக் கொண்ட பராம்பரியமிக்க உள்ளூர் உயர் இரகங்களை காட்சிப் பொருளாக வழங்கி, கண்காட்சியில் பங்கு கொண்டு விவசாயம் காத்து உணவு உற்பத்தியைப் பெருக்கிட பெருந்திரளாக கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
ஜூலைக்குள் மீண்டும் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி- உதயநிதி வாக்குறுதி
வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை- தொழிலாளர் நலன் துறை அமைச்சர் அறிக்கை
Share your comments