சாலை விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் அழிப்பதைக் கண்டு கடலூர் மாவட்ட விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க தரையில் உருண்டு பிரண்டு அழும் காட்சிகள் இணையங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி திட்ட பணிகள் என முன்னெடுக்கும் போது முதலில் அதற்கு இரையாகி போவது விளைநிலங்களும் அதன் விவசாயிகளும் தான். எந்த வகையில் தொழில் வளர்ச்சிக்காக விளைநிலங்கள் அழிக்கப்படுவதை ஏற்க இயலாது என்பதை சமூக ஆர்வலர்களின் பொதுவான கருத்து.
அப்படியிருக்கையில் கடந்த இரு நாட்களாக இணையத்தில் வயதான விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க அழுது புலம்பும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாலை விரிவாக்க பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்களும், விவசாயிகளும் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதுத்தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக கூறப்படும் நிலையில் 3 ஜேசிபிகளுடன், 30 காவல்துறையினர் விளைநிலங்களை கபளீகரம் செய்துள்ளனர்.
இதனை தடுக்க இயலாது வயதான விவசாயி ஒருவர் கதறி அழுது உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் டூ சென்னை 8 வழிச்சாலை நெடுஞ்சாலைத் திட்ட பணிக்கு எழுந்த விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாக அத்திட்டம் கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது. அதன் சுவடு மறைவதற்குள் மீண்டும் அதுப்போல் ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்தேறியுள்ளது விவசாய பெருமக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இதுத்தொடர்பான வீடியோவினை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசுக்கு அடுக்கடுக்கான கேள்வியினை முன்வைத்துள்ளார். அவரின் பதிவு பின்வருமாறு-
” கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, கடலூர் மடப்பட்டு இடையிலான மாநில நெடுஞ்சாலை அமைக்க நடைபெறும் நிலம் கையகப்படுத்தும் பணியை எதிர்த்து, நிலத்திற்கு குறைந்த மதிப்பில் விலை நிர்ணயம் செய்ததாகக் கூறி, அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், அதிகாரிகளும், காவல்துறையும், இன்னும் சில வாரங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த கரும்புப் பயிர்களை அடியோடு தரைமட்டமாக்கும் காணொளி பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கதறி அழுவதைக் கூட கண்டுகொள்ளாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்திருக்கிறார்கள்.
நிலத்தைக் கையகப்படுத்த, மாவட்ட ஆட்சியாளர் இரண்டு மாத காலம் அவகாசம் கொடுத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை அவசரமாக, கரும்புப் பயிர்களை அழிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? விவசாய நிலங்களில் கான்கிரீட் சாலை அமைத்து நடப்பவருக்கு, விவசாயிகளின் வலி எப்படிப் புரியும்?
உடனடியாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அரசு ஏற்கனவே நிர்ணயித்த கால அவகாசம் வரை, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
கரண்ட் பில் எடுக்க யாரும் வரமாட்டாங்க- ஸ்மார்ட் மீட்டர் குறித்து அமைச்சர்!
Share your comments