உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தி ஜூலை 25-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளதாக சங்க பொதுச் செயலாளர் சாமி நடராஜன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையினை ஜூன் 12 ஆம் தேதி முதல்வர் திறந்து வைத்தார். ஆனால், கர்நாடகவிலிருந்து மேட்டூர் அணைக்கு வர வேண்டிய தண்ணீர் முறையாக வரவில்லை. இரு மாநில அரசுகளுக்கிடையே தண்ணீஇர் பிரச்சினை வெடித்துள்ள நிலையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுக்குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி நடராஜன் தெரிவித்த விவரங்கள் பின்வருமாறு-
முதல்வர் சாகுபடிக்காக மேட்டூர் அணையினை திறந்து வைத்தப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. 35 நாட்களுக்கு பிறகு, மட்டம் 75 அடியாக குறைந்தது. தொடர்ந்து 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டால், தற்போதைய நீர் இருப்பு இன்னும் 12 நாட்களுக்கு நீடிக்காது. தண்ணீர் திறக்கும் அளவு போதுமானதாக இல்லாததால், வால் முனை பகுதிகளில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள குறுவை சாகுபடி பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளது.
காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும்:
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 122.24 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்தால் மட்டுமே வளர்ந்துள்ள குறுவை பயிரைக் காப்பாற்ற முடியும். ஜூன் மாதத்தில் ஏற்கனவே 6.29 டிஎம்சி அடி பற்றாக்குறை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூலை மாதம் கர்நாடகா தனது அணைகளில் இருந்து 31.24 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும், ஆனால் அது இன்னும் திறக்கப்படவில்லை.
கர்நாடக அணைகளில் நீர் இருப்பு போதுமானதாக இல்லாவிட்டாலும், காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவின்படி, மாநில அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தைக் கூட்டி கர்நாடகாவுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 25-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களின் தாலுகாவிலும், தலைமைச் செயலகத்திலும் சாலை மறியலில் ஈடுபட உள்ளோம்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டுவதைத் தவிர்க்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்புவார்கள் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி நடராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
கேரளாவின் செல்ல மகன் உம்மன் சாண்டி- சட்டமன்ற உறுப்பினராக சரித்திர சாதனை
Share your comments