கல்லணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு 25 நாட்களாகியும், திருவையாறு திருப்பூந்துருத்தி, கண்டியூர் வாய்காலுக்கு தண்ணீர் வராததால், காய்ந்து வரும் நாற்றங்கால்களைக் காப்பாற்ற விவசாயிகள் அடிபம்பிலிருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு ஊற்றி வருகின்றனர்.
வாய்காலுக்கு வராத தண்ணீர்
மேட்டூரில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி காவரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டப்பட்டது. இந்த தண்ணீரானது கல்லனைக்கு கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி தண்ணீர் வந்த உடன், டெல்டா மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டு கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டனர்.
கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 25 நாட்கள் ஆகியும் திருவையாறு அடுத்த திருப்பூந்துருத்தி, கண்டியூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேரவில்லை.
குடங்களில் தண்ணீர் கொண்டு பாசனம்
இதனால், நாற்றங்காலைக் காப்பாற்றக் கடந்த 3 நாட்களாக விவசாயிகள், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்டியூர் - திருப்பூந்துருத்தி பிரதான சாலையில் உள்ள அடிபம்பிலிருந்து குடம், வாளிகளில் தண்ணீர் நிரப்பி கொண்டுவந்து வயல்வெளிகளில் ஊற்றி வருகின்றனர்.
விவசாயிகள் வேதனை
கண்டியூர் வாய்க்கால் மூலம் சுமார் 2000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், ஆற்று நீரை நம்பி போர்வெல் மூலம் உழுது, நகைகளை அடகுவைத்து, விதைநெல்லை வாங்கி தெளித்து உள்ளோம். அவற்றைக் காப்பாற்ற வாய்க்காலில் தண்ணீர் வரும் என நம்பியிருந்தோம். ஆனால் 25 நாட்கள் ஆகியும் தண்ணீர் வரவில்லை. இதனால் நாற்றங்கால் வாடி காய்ந்து வருகிறது. தண்ணீர் வாய்க்காலில் வராததால் என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வருகிறோம். தமிழக முதல்வர் சிறப்புக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கின. இதனால் இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக, தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், கத்திரி நத்தம், கோவிலூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல்களில் இருந்த இளம் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
இப்பகுதிகளில் ஒரு வாரத்துக்கு முன்புதான் விவசாயிகள் குறுவை பயிரை நடவு செய்துள்ளனர். வேர் கூட பிடிக்காத நிலையில் அப்பகுதியில் பெய்த மழையால் ஏராளமான பயிர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடன் வாங்கி நடவு செய்யப்பட்ட நிலையில் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
மேலும் படிக்க...
கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!
காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!
கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!
Share your comments