மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்திய ஆப்பிள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த வார தொடக்கத்தில், அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, கிலோ ரூ.50-க்கும் குறைவான ஆப்பிள்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. இந்த செலவில் பழங்கள், காப்பீடு மற்றும் சரக்கு இறக்குமதி செலவு ஆகியவையும் அடங்கும். அரசின் இந்த முடிவினால் மலிவான விலையில் இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்களை இந்திய சந்தைக்கு கொண்டு வருவது முடங்கும். இந்த மலிவான இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்கள், குறிப்பாக ஈரானிய ஆப்பிளின் குறைந்த விலையுடன்- இந்திய ஆப்பிள் விவசாயி போட்டியிட முடியாமல் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஆண்டுக்கு 2.45 மில்லியன் டன் ஆப்பிள்களை உற்பத்தி செய்கிறது. காஷ்மீர், ஹிமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான ஆப்பிள் உற்பத்தியாளர்களைக் கொண்ட முக்கிய ஆப்பிள் உற்பத்தி மாநிலங்களாகும். இந்த ஆப்பிள் விவசாயிகள் அந்தந்த மாநிலங்களின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த விவசாயிகள் நெருக்கடியில் சிக்கினர். உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் பெரிய நிறுவனங்களின் போட்டியால் இந்திய ஆப்பிள் விவசாயிகள் நஷ்டத்தை எதிர்கொண்டனர்.
தெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA- South Asian Free Trade Area) நாடுகளுக்கு விதிவிலக்கு இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளதால் இது இந்திய விவசாயிகளுக்கு மேற்கொண்டு ஆப்பிள் சாகுபடியில் ஈடுபட நம்பிக்கையினை வழங்கியுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் சங்கத்தைச் சேர்ந்த ஹரிஷ் சவுகான் கூறுகையில், "அறிவிப்பில் SAFTA நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. எனவே ஈரான் தனது ஆப்பிள்களை ஆப்கானிஸ்தான் வழியாக சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முடியாது" என்றார்.
2021-2022 ஆம் ஆண்டில் இந்தியா 4.48 லட்சம் டன் ஆப்பிளை இறக்குமதி செய்துள்ளது. இந்த இறக்குமதியில் ஈரானின் சந்தைப் பங்கு 23 சதவீதமாக இருந்தது. முறையான கண்காணிப்பு இல்லாததால், இந்த இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்கள் இந்திய சந்தையை சட்டவிரோதமாக கைப்பற்றியதாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். அரசின் அறிவிப்பு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகின்றனர்.
ஜே & கே குளிர் சேமிப்பு சங்கத்தின் தலைவர் மஜித் வஃபாய் கூறுகையில், "இந்திய விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மண்டிகளில் ஈரானிய ஆப்பிள்கள் நுழைந்து எங்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதுவும் இப்போது மாறும்." என்றார்.
பல ஆண்டுகளாக குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்து வந்த இந்திய தோட்டக்கலை அமைப்புகள் அரசின் முடிவினை வரவேற்றுள்ளனர். அரசின் அறிவிப்பானது இந்திய ஆப்பிள் விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என கருத்து தெரிவித்து உள்ளனர்.
மலிவு விலையான ஆப்பிள்களின் இறக்குமதி தடை உத்தரவுக்குப் பிறகு, ஆப்பிள்களின் இறக்குமதி வரியை அதிகரிக்க இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
pic courtesy: oneindia/kJ
மேலும் காண்க:
Share your comments