உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, வருடாந்திர பிரம்மோஸ்சவ ஏகாந்த திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக தேவஸ்தான ஆலோசனைக் கூட்டம் திருமலையில் நடைபெற்றது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை இலவசமாக வழிபட திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசன டோக்கன்களை வழங்கி வந்தது. நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் அல்லது 30 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.
அவற்றை பெறுவதற்காக இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. மேலும் ஒரே நாளில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இலவச தரிசன டோக்கன் வாங்க வருவதால் அவர்களில் சுமார் 50 ஆயிரம் பக்தர்களுக்கு டோக்கன்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
இதனால் மேலும் ஓரிரு நாட்கள் காத்திருந்து டோக்கன்களை வாங்கி சாமி கும்பிட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. தரிசன டிக்கெட்டுகள் இல்லாத பக்தர்களை தேவஸ்தான நிர்வாகம் இன்று மதியம் வரை திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்காமல் இருந்து வந்தது. இதனால் டோக்கன்கள் கிடைக்காத பக்தர்கள் திருப்பதி மலைக்கு செல்ல இயலாமலும், திருப்பதியில் ஓரிரு நாட்கள் தங்கி, சாப்பிட்டு ஏழுமலையானை வழிபடுவதில் பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வந்தது.
3 நாட்களுக்கு பிறகு இலவச தரிசன கவுண்டர் இன்று திறக்கப்பட்டு டோக்கன் விநியோகிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பக்தர்கள் டிக்கெட் வாங்க குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று முதல் டிக்கெட் இல்லாத பக்தர்களையும் திருமலை செல்ல தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. மேலும் தரிசன டோக்கன்கள் மூலம் ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் நடைமுறையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. எனவே இனிமேல் பக்தர்கள் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த நடைமுறையின் படி நேராக திருப்பதி மலைக்கு சென்று கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்து ஏழுமலையானை வழிபடலாம்.
மேலும் படிக்கவும்:
கொரோனா தடுப்பூசி போடவில்லையா? திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க முடியாது!
பசுமைக்கு மாறும் திருப்பதி- லட்டு பிரசாதத்திற்கு பசுமை பைகள்!
Share your comments