கடந்த ஒரு மாதமாக லால்குடியில் உள்ள வாரச்சந்தையில் எள் விற்பனை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. எள் விவசாயிகள் மேற்கொண்ட சுறுசுறுப்பான சாகுபடியே அதிக விற்பனைக்குக் காரணம் என வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மாசிப்பட்டத்தில் எள் சாகுபடி பெரும்பாலும் தொடங்கப்படுகிறது. மே மாத இறுதியில் தொடங்கி சில இடங்களில் ஜூலை மாத இறுதி வரைக்கூட எள் அறுவடை நடைப்பெறுகிறது. ஆனால் எதிர்ப்பாராத கோடை மழையினால் சில இடங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டப் போதிலும் நடப்பாண்டு எள் விவசாயிகளுக்கு விற்பனை சாதகமாகவே உள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடியில் மட்டுமே அதிக அளவில் எள் சாகுபடி நடைபெறுகிறது. ஆதாரங்களின்படி, புதன்கிழமைகளில் செயல்படும் ஒழுங்குமுறை சந்தையில் ஜூன்-14 அன்று மட்டும் 1930 கிலோ எள் 1.96 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது.
ஜூலை 5- ஆம் தேதி சந்தையில் 9,283 கிலோ எள் ரூ.14.9 லட்சத்துக்கு விற்பனையானது. ரஷ்யா-உக்ரைன் போர் வெடித்ததில் இருந்து நாடு முழுவதும் எண்ணெய் வித்துக்களுக்கான தேவை அதிகரித்து, எள் விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்ததாக வேளாண் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லால்குடியில் இந்த ஆண்டு சுமார் 1,600 ஹெக்டேர் பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்பட்டது. எள் விவசாயி T.விக்னேஷ்வரன் முன்னணி நாளிதழ் ஒன்றிடம் தெரிவிக்கையில், ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை மூலம் விற்பனை மேற்கொள்வது போக்குவரத்து செலவுகளை குறைக்கிறது மற்றும் இடைத்தரகர்களுக்கான கமிஷன் இல்லாமல் செய்கிறது என்றார்.
இதுகுறித்து லால்குடி சந்தை மேற்பார்வையாளர் ஜி.விவேக் கூறியதாவது: "மழை சாகுபடியில் பாதிப்பை ஏற்படுத்திய போதிலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் விலை அதிகமாகவே இருந்தது. கடந்த ஆண்டு ஒரு கிலோ எள் அதிகபட்சமாக ரூ. 130 ஆக உயர்ந்தது, இந்த ஆண்டு கிலோ ரூ. 140 முதல் தொடங்கி விற்பனையாகிறது” என்றார்.
திருச்சி மார்க்கெட் கமிட்டி செயலர் ஆர்.சுரேஷ்பாபு கூறுகையில், "பல பெரிய வியாபாரிகள் எங்களிடம் நல்ல தரமான எள்ளினை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிக விலை போவதன் காரணமாக அதிகளவு விவசாயிகள் எள் சாகுபடியை மேற்கொள்கின்றனர்” என்றார்.
எள் பயிர் விதைத்து 85 முதல் 90 நாட்களில் அறுவடை செய்திட முடியும் என்பதால் சிறு, குறு, விவசாயிகள் பெரும்பாலும் எள் சாகுபடி மேற்கொள்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
எள்ளானது, சமையல் எண்ணெய் தயாரிக்க அதிகம் பயன்படும் சூழ்நிலையில், நடப்பாண்டு மகசூல் குறைந்திருப்பதாலும், கொள்முதல் விலை அதிகரித்திருப்பதாலும் எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் காண்க:
CASR- IFFCO கூட்டு முயற்சியில் 400 விவசாயிகளுக்கு ட்ரோன் பயிற்சி
Share your comments