நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினை 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.11 கோடி மதிப்பில் தொடர்ந்து செயல்படுத்திட நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பபளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 'வெள்ளைத் தங்கம்' என்று அழைக்கப்படும் பருத்திப் பயிரானது, சராசரியாக 1.62 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, ஒரு எக்டருக்கு 411 கிலோ உற்பத்தித் திறனுடன் 3.92 இலட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 2000 நூற்பாலைகள் இயங்குவதால், நாட்டின் பருத்தி நூற்புத்திறனில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
நடைப்பெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடப்பாண்டிற்கான வேளாண்மை உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
அதில் நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்து வழங்கிடும் நோக்கத்துடன், தொடர்ந்து பருத்திப் பயிரின் உற்பத்தியை உயர்த்தும் வகையில், இவ்வரசு, நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினைச் செயல்படுத்தி வருகிறது. வரும் ஆண்டிலும் பருத்தி உற்பத்தியை 4 இலட்சத்து 52 ஆயிரம் பேல்களாக உயர்த்தும் வகையில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் "நீடித்த நிலையான பருத்தி இயக்கம்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு தொடங்கி வைத்தார்.
கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்பு என்ன?
இத்திட்டத்தின் கீழ், நீண்ட, மிக நீண்ட இழை பருத்தி இரகங்களான எஸ்.வி.பி.ஆர்-5, எஸ்.வி.பி.ஆர்-6, கோ-14, சுரபி, சூரஜ் மற்றும் கோ-17 விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஒரு கிலோ விதைக்கு ரூ.60 வீதமும், சான்று பெற்ற பருத்தி விதைகள் விநியோகத்தின் கீழ் கிலோவிற்கு ரூ.130 வீதம், எக்டருக்கு ரூ.1,300 மானியமாக வழங்கப்படும்.
பருத்தியில் ஊடுபயிர் சாகுபடி செய்திட பயறு விதைகள் ஒரு எக்டருக்கு ரூ.500, பருத்தி நுண்ணுரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்கள் ஒரு எக்டருக்கு ரூ.950, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான இடுபொருட்கள் ஒரு எக்டருக்கு ரூ.6,500, விசை களைக்கருவி ஒன்றிற்கு ரூ.47,000 மற்றும் தண்டு கூன் வண்டுகளை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு இடுவதற்கு எக்டர் ஒன்றிற்கு ரூ.5,000 வீதம் மானியத்தில் பருத்தி விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் விருப்பமுள்ள சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தினால் நடப்பாண்டில் தமிழ்நாட்டின் பருத்தி சாகுபடியினை 1.70 இலட்சம் எக்டர் ஆக உயர்த்தவும், பருத்தி மகசூலை ஒரு எக்டருக்கு 380 கிலோவிலிருந்து 430 கிலோ என்ற அளவிற்கு பஞ்சு மகசூலை உயர்த்தி, உற்பத்தியினை 4.30 இலட்சம் பொதிகளாக உயர்த்தவும் வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டினைப் போலவே இந்தாண்டும் நீடித்த நிலையான பருத்தி இயக்கம் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளதால், சென்ற ஆண்டு வழங்கிய மானியத்திட்டங்களை இந்தாண்டும் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் காண்க:
தானியங்கி முறையில் வில்லங்க சான்றிதழா? பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டம்
Share your comments