மனித ஆற்றலை அடிப்படையாக கொண்டு நிலத்தை உழவு செய்யும் வகையில் டிராக்டர் ஒன்றினை வடிவமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பீகாரை சேர்ந்த இளைஞர். இந்த டிராக்டருக்கு பெட்ரோல், டீசல், மின்சாரம் எதுவும் தேவையில்லை என்பது தான் ஹைலைட்!
இன்றைய காலக்கட்டத்தில் விவசாய நிலத்தை உழுவதற்கு டிராக்டர் இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது. பல விவசாயிகளிடம் தங்களது விவசாய நிலத்தை உழுவதற்கு சொந்தமாக டிராக்டர் வாங்க போதுமான பணம் இல்லை, மேலும் பாரம்பரிய முறையினை இன்றளவும் உழவுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் எதற்கும் உதவாது என தூக்கி வீசப்பட்ட பொருட்களை கொண்டு டிராக்டர் மாடல் ஒன்றினை பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் பகுதியில் உள்ள நௌதான் பிளாக்கில் உள்ள துஸ்வான் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் உருவாக்கியுள்ளார்.
இந்த டிராக்டர் பட்ஜெட்டுக்கு ஏற்றது மட்டுமல்ல. அது வேலை செய்ய பெட்ரோல், டீசல், மின்சாரம் கூட தேவையில்லை. நீங்கள் அதை மிதித்தால் போதும். இதற்கு HE டிராக்டர் (Human energy- மனித ஆற்றல்) என்று சரியாக பெயரிட்டுள்ளார் சஞ்சீத். இந்த டிராக்டரை உருவாக்க சுமார் ஒரு மாதம் காலம் ஆனதாக தெரிவித்துள்ளார்.
சைக்கிள் ஓட்டும்போது ஒருவருக்குத் தேவைப்படும் அதே வலிமை தான் இந்த டிராக்டர் வாகனத்தையும் இயக்க தேவை என்கிறார். ஹெட்லைட்களாகப் பயன்படுத்தப்படும் எல்இடி பல்புகளுக்கு 5000 mAh சக்தி கொண்ட சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியை நிறுவியுள்ளதாக அவர் மேலும் கூறினார். இது 1 மற்றும் 4 கியர்களைக் கொண்டுள்ளது, இதனால் இது சாலையில் மற்றும் வயல்வெளியில் எளிதாக இயங்கும். மனித ஆற்றல் டிராக்டரில் 600 கிலோ எடையையும் சுமந்து செல்ல முடியும்.
HE டிராக்டர் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று கேட்டபோது, சாதாரண டிராக்டரைப் போலவே 2.5 முதல் 3 அங்குலங்கள் வரை மண்ணை எளிதாக உழ முடியும் என்று சஞ்சீத் தெரிவித்துள்ளார்.
இது ஆற்றலையும், பணத்தையும் மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், செயல்பாட்டில் எந்த விலங்குக்கும் தீங்கு விளைவிக்காது என்றும் அவர் கூறினார்.
பெரிய டிராக்டர்களை விட உழவு செய்வதற்கு தனது டிராக்டர் சிறந்தது என்கிறார். ஏனெனில் இது சிறிய அளவிலான பண்ணைகள் அல்லது தோட்டம் சார்ந்த பயிர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என விளக்கம் கொடுத்துள்ளார். டிராக்டரின் வேகம் மணிக்கு 5 முதல் 10 கிலோமீட்டர் வரை இருக்கும்.
கடந்த ஆண்டு கோவாவில் நடந்த இந்திய சர்வதேச அறிவியல் கண்காட்சியில் தனது HE டிராக்டரை காட்சிப்படுத்தியதாக சஞ்சீத் மேலும் குறிப்பிட்டார். அந்த கண்காட்சியில் பீகார் மாநிலம் சார்பில் பங்கேற்ற ஒரே நபர் சஞ்சீத் தான்.
விவசாய முறைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், அதுவும் குறைந்த செலவில் மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு HE டிராக்டர் உத்வேகம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
Share your comments