1. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
பிரதமர் மோடி தலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதனை அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 1 ஆம் தேதி முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சிலிண்டர் மானியம் அதிகரிப்பு
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வழங்கப்படும் வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கும் நபர்களுக்கு ரூ.200 மானியம் சேர்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் 35 லட்சம் பேர் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
3. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடைப்பெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 18.36 லட்சம் பேர் பங்கேற்றனார். அதிகம் பேர் தேர்வில் பங்கேற்ற காரணத்தினால் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே, காலி பணியிடங்களின் எண்ணிக்கையை 7,301-ல் இருந்து 10,117-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தேர்வு முடிந்த 8 மாதங்களுக்கு பிறகு குரூப்-4 தேர்வு முடிவுகள் TNPSC இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
4. பான் கார்டுடன் - ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள்
இந்தியர்கள் அனைவருமே ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி தேதி வரும் மார்ச் 31 ஆம் தேதி ஆகும். ஒருவேளை மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலிழந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு செயலிழக்கும் பட்சத்தில் வங்கி சேவைகளையோ, பண முதலீடு உள்ளிட்ட நிதி சார்ந்த பரிவர்த்தணைகளையோ மேற்கொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
5. ஒடிசாவில் கிரிஷி சன்யந்தரா மேளா இன்று தொடக்கம்
ஒடிசாவின் பாலசோரில் உள்ள கருடா மைதானத்தில் க்ரிஷி சன்யந்தரா மேளா-2023 இன்று தொடங்கியது. இந்த மேளா மூன்று நாள் நிகழ்வாக வருகிற முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விவசாயிகளுக்கு சமீபத்திய விவசாய தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை குறித்து விழிப்புணர்வினை வழங்கும் நிகழ்வாக இந்த மேளா நடைபெற உள்ளது. ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பர்ஷோத்தாம் ரூபாலா ஆகியோர் பங்கேற்கும் இந்த நிகழ்வினை கிரிஷி ஜாக்ரான் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
6. தெற்கு ரயில்வேயுடன் கைக்கோர்த்த ஏதெர் நிறுவனம்
இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏதெர் எனர்ஜி, தெற்கு ரயில்வேயுடன் இணைந்து சென்னையில் உள்ள 10 MRTS மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக ரயில் நிலையங்களில் 100 சதுர அடி பரப்பளவிலான இடத்தை ஏதர் எனர்ஜிக்கு, தெற்கு ரயில்வே வழங்கவுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தால் ஒரே இடத்தில் மூன்று சார்ஜர்களை நிறுவ முடியும்.
7. பெசண்ட் நகர் கடற்கரையில் சர்வதேச வன நாள் விழா கடைப்பிடிப்பு
சென்னையிலுள்ள பெசண்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரையில் வனத்துறை சார்பாக சர்வதேச வனநாள் விழா நடைப்பெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று வன விலங்குகளை பாதுகாப்பதின் அவசியத்தை குறித்து நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இதன்பின் வனத்துறை மூலம் வளர்க்கப்பட்ட ஆமை குஞ்சுகளை கடலில் விட்டார். இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் & வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு உள்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
8. வானிலை தகவல்
தமிழ்நாட்டில் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக ஆங்காங்கே சில மாவட்டங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையானது தொடர்ந்து வருகிற 28 ஆம் தேதி வரை பெய்யும் எனவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டதுடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர் உட்பட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் காண்க:
Share your comments