1. செய்திகள்

மாதம் ரூ.60,000 உதவித்தொகையுடன் 40 பசுமைத் தோழர்கள் தேர்வு- என்ன திட்டம்?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Launch of chief ministers green fellowship in chennai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.8.2023) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவிடும் வகையிலும் முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், இத்திட்டத்தை செயல்படுத்திட அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் ஆய்வு நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்ட 40 பசுமை தோழர்களும் முதல்வரை இன்றைய நிகழ்வில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பசுமைப் புத்தாய்வுத் திட்டம்:

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தினை தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.முதலமைச்சரின் பசுமைத் புத்தாய்வுத் திட்டமானது சுற்றுச்சூழல் துறைகளில் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் நீடித்த வாழ்க்கை முறை போன்ற அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய இளைஞர்களுக்கான தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்த தமிழ்நாடு அரசின் அர்ப்பணிப்பை மட்டுமல்லாது மாநிலத்தின் சுற்றுச்சூழல் குறித்த எதிர்காலத்தை உறுதி செய்வது, கொள்கை வடிவமைப்பு மற்றும் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் இளைஞர்களின் பங்கினையும் பறைசாற்றுகிறது.

பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தின் கட்டமைப்பு:

முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டமானது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் செயல்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனம் இத்திட்டத்திற்கான அறிவுசார் பங்குதாரராக செயல்படும். ஒரு திட்டத் தலைவர், 40 பசுமைத் தோழர்கள் மற்றும் நான்கு ஆராய்ச்சி இணையாளர்கள் ஆகியோர் தகுதியின் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனம் மூலமாக இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பசுமைத் தோழர்களுக்கான செயல்பாடு/ சலுகை விவரம்:

பசுமைத் தோழர்கள் தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட நிர்வாகங்களின் சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக முக்கிய பங்காற்றுவர். தமிழ்நாடு கால நிலைமாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கம் போன்ற முக்கிய அரசுத் திட்டங்களின் செயலாக்கத்திற்கு பசுமைத் தோழர்கள் துணை புரிவர். சிறப்பான சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குதல் மற்றும் ”மீண்டும் மஞ்சப்பை" போன்ற சூழல்சார் மாற்றுப் பொருட்களின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற சேவைகளை ஆற்றுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பசுமைத் தோழர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு சேவையாற்றுவர். இக்காலகட்டத்தில், அவர்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.60,000/- வழங்கப்படும். இத்திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற அவர்களுக்கு மடிக்கணினியும் வழங்கப்படும். அவர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படும்.

பசுமைத் தோழர்கள் இரண்டாண்டு சேவையின் முடிவில் அண்ணா பல்கலைக் கழகத்திடமிருந்து "கால நிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை” என்ற முதுகலை பட்டயப் படிப்பிற்கான பட்டத்தையும் பெறுவர்.

இன்றைய நிகழ்வில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ உட்பட அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

மேலும் காண்க:

WhatsApp-ல் வந்தாச்சு AI ஸ்டிக்கர் வசதி- எப்படி உருவாக்குவது?

தஞ்சை உட்பட 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

English Summary: Launch of chief ministers green fellowship in chennai Published on: 21 August 2023, 02:56 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub