7 நாட்களாக நடைபெற்று வந்த கீழ்பவானி விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாய் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் (ERM) திட்டத்திற்காக NABARD வங்கியின் மூலம் 709.60 கோடி ரூபாய் கடன் பெற்று பணிகள் துவங்குகின்ற நேரத்தில் விவசாயிகளில் ஒரு சாராரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன.
கடந்த ஜூன் 7- ஆம் தேதி முதல் பெருந்துறை வாய்க்கால் மேட்டில் 27 விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அறச்சலூர் பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முயன்ற போது திட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர்.
அமைச்சர் முத்துசாமி அவரது தலைமையில் நேற்று நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. இதுக்குறித்து, அமைச்சர் தெரிவிக்கையில், “விவசாயிகள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர், அவை முதல்வர் முன் வைக்கப்படும். அரசின் பதிலை பொறுத்து மீண்டும் விவசாயிகளிடம் பேச உள்ளோம். போராட்டத்தை கைவிட்ட விவசாயிகளுக்கு தற்போது எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
கால்வாய் சீரமைப்பதில் பிரச்சினை என்ன?
கீழ்பவானி பிரதான கால்வாயின் தரைப்பகுதியில் கான்கீரிட் தளம் அமைத்து விட்டால் தண்ணீர் பூமியில் ஊராது. கால்வாயின் அருகில் இருக்கின்ற விவசாயிகள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் சிரமப்படுவார்கள். எனவே, தரையில் கான்கீரிட் தளம் அமைக்கக் கூடாது என்று ஒரு சாரார் கேட்டுக் கொண்டார்கள்.
கரைகள் மற்றும் கட்டுமானங்களை பொருத்தமட்டில் சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்டவை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
கால்வாய்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்த காரணத்தால் காலப்போக்கில் அவைகள் சிதைந்து, உடைந்து, பலமிழந்து போய்விட்டது. அன்று கரையில் வைக்கப்பட்ட மரங்கள் பெருமளவில் வளர்ந்து வேர்கள் மூலம் கரைகள் உடைவதற்கு காரணமாகி விட்டது. மதகுகள் மற்றும் மழைநீர் செல்லும் பாலங்கள் காலப்போக்கில் சிதைந்து போய் விட்டது.
இவைகளையெல்லாம் சீரமைத்தால் தான் விவசாயத்திற்கு தண்ணீர் தடையின்றி கடைமடை வரை கிடைக்கும். கால்வாயின் தரையில் எக்காரணம் கொண்டும் கான்கீரிட் தளம் போடக்கூடாது என்றும், சேதமடைந்த மதகுகள் (Sluices) மற்றும் குறுக்கு கட்டுமானங்களை (Cross Masonry Structures) சீரமைத்திடவும், மிகவும் பலவீனமாக உள்ள கால்வாய் கரைப் பகுதிகளில் concrete சுவர் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சீரமைப்பு பணிகள் தற்போதைய விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணமாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்சினை குறித்து விரைவில் சுமூக முடிவு எடுக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
Share your comments