பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. எனவே விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம் என தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கையில், பழுப்பு நிலக்கரி எடுக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றார். மேலும், நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து நாளை சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விளக்கம் அளிப்பார் எனவும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக பாமக-வின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நிலக்கரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைச்செயலகத்தில் இப்பிரச்சினை குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம், நிலக்கரி சுரங்கத்துக்கு ஒருபோதும் அனுமதி இல்லை. எனவே, விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி நிலக்கரி சுரங்கம், மீத்தேன் உள்ளிட்ட திட்டத்திற்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் நிலக்கரி எடுக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். மின்சார தட்டுப்பாட்டை காரணம் காட்டி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அரசு முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசு மக்களின் பேராதரவுடன் தமிழ்நாட்டில் இயங்கி கொண்டிருக்கிறது. எந்த சூழலிலும் நிலக்கரி விவகாரத்தில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்களை தமிழ்நாட்டில் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற பூதம் மூலம் தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருந்த ஒன்றிய பாஜக அரசு, இப்போது ஒரத்தநாடு உள்ளிட்ட 11 இடங்களிலும், அரியலூர், கடலூர் மாவட்டம் உள்ளிட்ட டெல்டா பகுதியை ஒட்டியுள்ள 66 இடங்களிலும் நிலக்கரி எடுக்கப் போவதாக அறிவித்திருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஒன்றிய அரசின் இந்த ஏதேச்சதிகார போக்கு கடும் கண்டனத்திற்குரியது என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் அதன் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
இதைப்போல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் காண்க:
விவசாயிகளை அச்சுறுத்தும் பாம்பு பிரச்சினைக்கு தீர்வு- பள்ளி மாணவர்கள் சாதனை
எங்கடா.. இங்க இருந்த பறவையை காணும்- டிவிட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சியளித்த மஸ்க்
Share your comments