நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை மின் திட்டப்பணிகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்திற்கு வருகைத்தந்துள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை மின் திட்டப்பணிகள் குறித்து (03.03.2023) நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடிய உதயநிதி அவர்களின் கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசிய விபரங்கள் பின்வருமாறு-
கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் 2010 ஆம் ஆண்டு துவக்கிய திட்டம் என்பதற்காக, இத்திட்டமானது நிறுத்தப்பட்டு யாருக்கும் உபயோகம் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. வட்டி மட்டுமே இந்த திட்டத்திற்கு ரூ.1,250 கோடி கடந்த ஆட்சிக்காலத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளார்கள். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.1,250 கோடி. ஆனால் இந்த திட்டத்திற்கு செலுத்தியுள்ள வட்டி மட்டுமே ரூ.1,250 கோடி. இதனால் ரூ.2,500 கோடி யாருக்கும் உபயோகம் இல்லமால் செலவாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தவுடன் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் விரைவில் மோகனூரில் உள்ள சர்க்கரை ஆலையில் இணை மின் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று உறுதியளித்துள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசானது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது. இத்திட்டம் வரும் ஜூலைக்குள் முடிக்கப்பட்டு மின் உற்பத்தியை நாங்களே நேரில் வந்து தொடங்கி வைப்போம் என்றார்.
“நாமக்கல் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை முடக்கும் நோக்கில் இதன் அரவையை குறைத்தனர். கரும்புச் சக்கையில் இருந்து 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முத்தமிழறிஞர் கலைஞரின் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று போராடியதற்காக எங்களை சிறையில் தள்ளினார் அன்றைய மின்துறை அமைச்சர். இத்தனைக்கும் அவரும் நாமக்கல்லை சேர்ந்தவர்” என்று கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா.பி.சிங்,இ.ஆ.ப., , சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மல்லிகா ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
பூமி இன்னும் சூடாகுமோ? கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் 2022-ல் புதிய உச்சம்
சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிர்வாகம் தவறிவிட்டது- ஜி20 மாநாட்டில் மோடி உரை
Share your comments