சமூக முதலீட்டு தளமான ரங் தே, மிஷன் சம்ரித்தியுடன் இணைந்து காளான் நிதியை தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக, தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள 40 விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
காளான் வளர்ப்பு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். காளான் வளர்ப்பில் இருந்து நிலையான வருமானத்தை ஈட்ட, தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிதி பெறப்படுகிறது.
Rang De (a peer-to-peer social investing platform) 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. செப்டம்பர் 2019 முதல் ரிசர்வ் வங்கியின் NBFC P2P- கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. ரங்க் தே நிறுவனத்தின் முக்கிய நோக்கம், முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பப்படி விவசாயிகள் அல்லது கிராமப்புற தொழில் முனைவோர் மீது முதலீடு செய்ய உதவும் ஒரு சமூக முதலீட்டு தளமாகும்.
கிராமப்புறங்களில் முழுமையான, கூட்டு மற்றும் நிலையான வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் மிஷன் சம்ரித்தி அமைப்புடன் ரங்க் தே நிறுவனம் கைக்கோர்த்து “காளாண் நிதி” (MUSHROOM FUND) தொடங்கியுள்ளது. இதுக்குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை-முதற்கட்டமாக, தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 40 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் முதல் ஆண்டில் குறைந்தபட்சம் ₹8,000 மாத வருமானம் ஈட்டக்கூடிய உதவித்தொகையைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மாதங்களுக்குள் விவசாயிகள் மாதம் ரூ.20,000-க்கு மேல் சம்பாதிக்கும் வகையில் இந்தத் திட்டம் மிஷன் சம்ரித்தி மூலம் தொடரப்படும்.
இந்த நிதி திரட்டல் அமைப்பின் மூலம் ஏற்கனவே 440-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து இதுவரை ₹ 40 லட்சத்திற்கும் மேல் பணம் திரட்டியுள்ளது. காளான் பண்ணையாளர்களுக்கு காளான் கொட்டகை அமைப்பதற்கும், காளான் வளர்ப்பின் முதல் 18 மாதங்களுக்கு செயல்பாட்டு மூலதனம் வழங்குவதற்கும் இந்த நிதி வழங்கப்படும். திரட்டப்பட்ட நிதியில் இருந்து இதுவரை 17 விவசாயிகளுக்கு தலா 1,95,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காளான் நிதி என்பது தமிழ்நாட்டை சேர்ந்த காளான் விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், முதலீடு செய்தவர்களுக்கு 18 மாத காலத்திற்குப் பிறகு ஆண்டுக்கு 8 சதவீதம் வரை வருமானம் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
“காளான் வளர குறைந்த அளவிலான இடமும்,தண்ணீரும் போதும். ஆரோக்கியமான உணவுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த காளாண் நிதி திரட்டல் முயற்சி மூலம் அதிக விவசாயிகள் பலனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று ரங் தேயின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்மிதா ராம் கூறினார்.
இந்தியா 2013-14-ல் 17,100 மெட்ரிக் டன் காளான்களை உற்பத்தி செய்தது, இது 2018-க்குள் 4,87,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 2010-2017 முதல், இந்தியாவில் காளான் தொழில் சராசரியாக 4.3% வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காளாண் நிதி தொடர்பான மேலும் தகவலுக்கு காண்க: https://rangde.in/mushroom-project
மற்ற செய்திகளையும் காண்க:
Share your comments