2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பி.டி.ஆர் இன்று தாக்கல் செய்தார். இந்தாண்டு பட்ஜெட்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பழைய ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதித்துறையின் அமைச்சராக பதவி வகித்து வரும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 3-வது ஆண்டாக காகிதமில்லா (இ-பட்ஜெட்) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
2004-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமான தேசிய பென்சன் திட்டம் அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு பென்சன் திட்டம் என்ற சிபிஎஸ் திட்டம் அமலில் இருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டப் பலன்கள், இப்புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை. ஆகையால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
திமுகவும் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதியில் திமுகவின் ஆட்சி அமைந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தது. ஆனால் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே நடப்பாண்டு பட்ஜெட் தாக்கலின் போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையிலும், நடப்பாண்டிலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆளும் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தன.
ஆனால், இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது அதுகுறித்த எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை அதே நேரத்தில், அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் 40 லட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு-
அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். வரும் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும்.
உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம் 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக வரும் நிதியாண்டிலிருந்து உயர்த்தப்படும் என்றார். மேலும், ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்களுக்கு ‘தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தில்’ நிதியுதவியாக 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னர், இந்நிதியுதவிக்கான கோரிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 2021- 2022 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் சிறப்பு நிதியாக இந்த அரசு வழங்கியுள்ளது. நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை தீர்வு செய்ய மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றின்போது உயிரிழந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு, தலா 25 இலட்சம் ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் கருணைத்தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் எதிர்ப்பார்த்த தகவல்கள் இல்லையென்று வருத்தப்படவா, இல்லை வீடு கட்ட முன்பணம் அதிகரிக்கப்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடையவா என்கிற குழப்பத்தில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.
மேலும் காண்க:
Share your comments