தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான முயற்சிக்கு தமிழக அரசு ”அனுமதி அளிக்காது” என ஒன்றுக்கு மூன்று முறை குறிப்பிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நேற்றைய தினம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஆய்வில் ஒன்றிய அரசு ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகள் உண்டாகியது. அரசியல் தலைவர்கள் முதல் விவசாயிகள் வரை எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நிலக்கரி எடுக்க அனுமதிக்கக்கூடாது என பல்வேறு கட்சித்தலைவர்கள், எம்.எல்.ஏ-க்கள் சிறப்பு தீர்மானத்தின் கீழ் உரையாற்றிய பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் உரையாற்றினார். அதன் விவரங்கள் பின்வருமாறு-
இங்கே கொண்டு வந்திருக்கக்கூடிய கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு நம்முடைய தொழில் துறை அமைச்சர் விளக்கமாக பதிலளித்திருக்கிறார்கள். எனவே, நான் நீண்ட நேரம் அது குறித்து விளக்க வேண்டிய அவசியமில்லை. நீங்களெல்லாம் இந்தச் செய்தியைக் கேட்டு எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ, நானும் அதே அதிர்ச்சிக்கு ஆளானேன். இதுகுறித்த செய்தியைப் பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நான் தொடர்பு கொண்டு பேசி, அதற்குப்பிறகு உடனடியாக பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்.
அதோடு, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிற காரணத்தால், அங்கே டெல்லியில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு அந்தக் கடிதத்தினுடைய நகலை அனுப்பி, உடனடியாக சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து, நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், நான் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை நீங்கள் அவரிடத்திலே தரவேண்டுமென்று உத்தரவிட்டேன். அவரும் அதற்கான முயற்சியிலே ஈடுபட்டார்.
இங்கே தொழில் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததுபோல, சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் அவர்கள் வெளியூரில் இருக்கிற காரணத்தால், அவரை நேரில் சந்திக்க இயலாததால், டி.ஆர். பாலு அவர்கள், ஒன்றிய அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவருடன் பேசியபோது, "தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அவர்கள் கடிதத்திற்கு நிச்சயமாக நாங்கள் மதிப்பு அளிப்போம்; கவலைப்பட வேண்டாம்" என்ற ஓர் உத்தரவாதத்தை ஒன்றிய அமைச்சர் சொன்னதாக ஒரு செய்தியை டி.ஆர். பாலு அவர்கள் என்னிடத்திலே தெரிவித்திருக்கிறார்கள்.
ஆகவே, நிச்சயமாக சொல்கிறேன் முதலமைச்சராக மட்டுமல்ல; நானும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனவே, இதிலே நான் உறுதியாக இருப்பேன். நீங்களெல்லாம் எப்படி உறுதியாக இருக்கிறீர்களோ, அதைவிட அதிகமாக, அந்த அளவிற்கு நானும் உறுதியாக இருப்பேன். எந்தக் காரணத்தைக் கொண்டும், அதற்கு நிச்சயமாக நம்முடைய தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது; அளிக்காது; அளிக்காது என தெரிவித்தார்.
மேலும் காண்க:
தமிழகத்தில் தைவான் நாட்டு நிறுவன காலணி தொழிற்சாலை- எங்கே அமையப்போகுது தெரியுமா?
Share your comments