1. செய்திகள்

ஒடிசா இரயில் விபத்து- தமிழகம் முழுவதும் இன்று துக்கம் அனுசரிப்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Odisha train accident - Mourning observed across Tamil Nadu today

இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக தற்போது நிகழ்ந்துள்ள ஒடிசா (Odisha) ரயில் விபத்து சம்பவம் கருதப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மூன்றும் ஒடிசா (Odisha) மாநிலத்தில் பயங்கர விபத்திற்குள்ளாகி தற்போது வரை 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்கிற தகவல் கிடைத்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து, ஆங்காங்கு இருக்கக்கூடிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை நோக்கி வந்த இரயிலில் தமிழகத்தை சேர்ந்த பலரும் பயணித்திருக்கக்கூடும் என்பதால் தமிழ்நாடு அரசு சார்பிலும் மீட்பு பணிகள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஒடிசா  (Odisha) இரயில் விபத்து தொடர்பாக சென்னை - சென்ட்ரல் தெற்கு இரயில்வே தலைமை கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த விவரங்கள் பின்வருமாறு-

ஒடிசாவில் (Odisha) நிகழ்ந்துள்ள இரயில் விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், இன்றைய நாள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்திவிட்டு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலியை நாங்கள் அனுசரித்தோம்.

இன்று ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞரின் 100-ஆவது பிறந்தநாள் தொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.

நிவாரண நிதி அறிவிப்பு:

அதுமட்டுமல்லாமல், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதம மந்திரி அவர்களின் நிவாரண நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது

அதேபோன்று இரயில்வே துறையின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் 5 இலட்சம் அறிவித்திருக்கிறோம். அதேபோல் காயமடைந்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறோம். அதுகுறித்த கணக்கெடுப்பு எல்லாம் முறையாக வந்ததற்கு பிறகு அது முறையாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மீட்பு பணிகள் தொடர்பான தொலைபேசி எண்:

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு வருவதற்கும் தமிழ்நாடு அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது.

விபத்து குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கு மாநில கட்டுப்பாட்டு செல்போன் எண்: 94458 69843 தொலைபேசி எண்: 1070, வாட்ஸ்அப் எண்: 94458 69848 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

Balasore- நானே 250 உடல்களை பார்த்தேன்.. ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய பயணி தகவல்

English Summary: Odisha train accident - Mourning observed across Tamil Nadu today Published on: 03 June 2023, 12:02 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.