பெண்களுக்கான பிரத்யேக பெட்டிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம், குறைந்த RPF காவலர்கள் கொண்டு பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என ரயில்வே துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
போதிய பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லாததால், சென்னை புறநகர் ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் போலீஸாரை நியமிப்பதில் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே காவல்துறை ஆகிய இரண்டும் சவால்களை எதிர்கொள்கின்றன.
இந்திரா நகர் MRTS ஸ்டேஷனில் மொபைல் பறிப்பு முயற்சியின் போது 22 வயது பெண் ஒருவர் இறந்தார். இச்சம்பவம் நடைப்பெற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னை ரயில்வே கோட்டம் பெண்களுக்கான பிரத்யேக பெட்டிகளை புறநகர் ரயில்களின் நடுப்பகுதிக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெட்டிகள் மாற்றம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவு EMU மற்றும் MEMU ரயில்களுக்கும் பொருந்தும் என்று ரயில்வே அதிகாரி மேலும் கூறினார். தற்போது, இரண்டு ஒருங்கிணைந்த பெண்களுக்கான பெட்டி மற்றும் முதல் வகுப்பு ரயில் பெட்டியானது ஒன்பது கார் ரேக்குகளில் முன் மற்றும் பின் பக்கங்களில் இருந்து இரண்டாவது பெட்டியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பெட்டிகள் தற்போது முன்பக்கத்தில் இருந்து நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களுக்கு மாற்றப்படும். 12-கார் ரேக்குகளிலும் இதே போன்ற மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு RPF மூத்த அதிகாரிகளால் சமீபத்திய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. பின்னர் சென்னை கோட்ட ரயில்வே மேலாளரால் அங்கீகரிக்கப்பட்டது. முன்னதாக ஜூலை 14 அன்று, ஆவடி, தாம்பரம் மற்றும் வேளச்சேரி ஷெட்களில் உள்ள புறநகர் ரயில்களின் பராமரிப்பை மேற்பார்வையிட்ட மூத்த கோட்ட மின் பொறியாளர்களிடம், RPF பெட்டிகள் மாற்றம் தொடர்பான கோரிக்கையினை சமர்பித்தது.
MRTS ரயிலில் பெண் பயணி ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, பெண்கள் பெட்டிகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் சேவைகளில் ஆயுதம் ஏந்திய RPF காவலர்களை நியமித்துள்ளது. பீக் ஹவர்ஸ் எனப்படும் அதிகளவிலான பொதுமக்கள் ரயிலில் பயணிக்கும் நேரங்களில் அனைத்து பெண்களுக்கான பெட்டியிலும் காவலர்கள் இருப்பதை ஆர்பிஎஃப் உறுதி செய்துள்ளது. முன்மொழியப்பட்ட மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டால், பெரும்பாலான பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு கவரேஜ் இருக்கும், ” என்று ரயில்வேத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜூன் மாத நிலவரப்படி, சென்னை பிரிவு 668 ரயில் சேவைகளை இயக்குகிறது. இதில் 299 சேவைகள் 12- பெட்டிகள் கொண்ட ரயில், 330 சேவைகள் 9 பெட்டிகள் கொண்ட ரயில் மற்றும் 39 MEMU சேவைகள் உள்ளன.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை - திருத்தணி, சென்னை - கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி MRTS வழித்தடங்களில் தினமும் சுமார் 11.5 லட்சம் பயணிகள் பயணிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: Ashwin prasath (TNIE)
மேலும் காண்க:
Share your comments