தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி, சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசியலில் மீண்டும் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2006- 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது கனிமவளத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் பொன்முடி. இக்குறிப்பிட்ட காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் வழக்கு தொடரப்பட்டது. அதில் தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடியளவில் சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, இவர்களுடன் மணிவண்ணன் என மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவ்வழக்கினை நீண்ட காலமாக விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் மூவரையும் குற்றமற்றவர் என குறிப்பிட்டு விடுதலை செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு மேற்கொள்ளப்பட்டது.
மேல்முறையீட்டு வழக்கினை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி மற்றும் விசாலாட்சி இருவரையும் குற்றவாளி என அறிவித்த நிலையில், இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேசியக்கொடி இல்லாத காரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி. தீர்ப்பு வாசிப்பதற்கு முன்னதாக, தனது வயதையும்- மருத்துவ காரணங்களையும் கருத்தில் கொண்டு தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்றும் பொன்முடி மற்றும் விசாலாட்சி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதற்குப்பின் நீதிபதி ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பினை வாசிக்கத் தொடங்கினார். தீர்ப்பின் விவரம் பின்வருமாறு-
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை நிறுத்தி வைப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொன்முடியின் மனைவி விசாலாட்சியும் குற்றவாளி என குறிப்பிட்ட நிலையில் அவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறைத் தண்டைனையுடன், இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பொன்முடி இழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அமலாக்கத்துறை பதிந்த வழக்கில் இலாகா இல்லாத அமைச்சராக சிறையில் செந்தில்பாலாஜி இருக்கும் நிலையில், பொன்முடி வழக்கு மீதான தீர்ப்பு தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more:
எட்டாத உயரத்தில் இஞ்சி விலை- மற்ற காய்கறி விலை எப்படி?
கனமழையில் சிக்கிய நெல்லை மாவட்ட விவசாயிகளே அடுத்த சில நாள் இதை செய்யுங்க!
Share your comments