கண்களை ஸ்கேன் செய்து ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து இருக்கிறார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
இலவச ரேஷன் பொருள் வழங்குவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் இருந்து வருகின்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இலவச அரிசி முதல் பொங்கல் பொருட்கள் வழங்குவது வரைக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளையும் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் தமிழக அரசு, போலி ரேஷன் அட்டைதாரர்களை அடையாளம் காணவும், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரும் ரேஷன் பொருட்களை வாங்கவும் புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருப்பதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ரேஷன் கடைகளில் பொருளை வாங்கும் முன்பு கண்களை காட்டினால்போதும் இனி ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது. கருவிழிகளை ஸ்கேன் செய்து அதன் மூலம் பயனாளர்களை அடையாளம் கண்டு பொருட்களை வழங்கலாம். இது குறித்து முன்னரே ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், திட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சர் சக்கரபாணி புதிய அப்டேட்டை தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பேசியவர்,"கைரேகை வைத்து பொருள் பெற இயலாத மாற்றுத்திறனாளிகள், வயலில் வேலை செய்வோர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் கண் கருவிழி மூலம் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே மாதிரி திட்டமாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
விரைவில் அந்த திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்து இருக்கிறார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, கைரேகை அழிந்தவர்களுக்கு நியாய விலை கடைகளிலேயே விண்ணப்பங்களைப் பெறக்கூடிய வசதியினை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதனை ஏற்றுக் கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சக்கரபாணி, வருவாய்துறை அலுவலகங்களுக்குச் செல்லும் நிலை மாற்றப்பட்டு நியாய விலை கடைகளிலேயே இந்த விண்ணப்பங்களைக் கொடுக்கும் முறை அமல்படுத்தப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.
மேலும் படிக்க
Share your comments