1. செய்திகள்

கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்கள்- தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Sale of ration products in black market on april 2023 details

கடந்த ஏப்ரல் மாதம் கள்ளச்சந்தையில் விற்க முயன்ற ரேஷன் பொருட்களின் விவரங்கள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையினை தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் / சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.

அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் மற்றும் உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம், (1955) மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் முறையாக வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980-ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர்.

ஏப்ரல் மாதம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விவரம்:

மேற்குறிப்பிட்ட சட்டபிரிவுகளின் படி கடந்த 01.04.2023 முதல் 30.04.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.23,61,969/- (ரூபாய் இருபத்து மூன்று லட்சத்து அறுபத்தொராயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பது மட்டும்) மதிப்புள்ள 3,293 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 152 எரிவாயு உருளைகள், 90 கிலோ கோதுமை, 250 கிலோ துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் 251 லிட்டர் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 156 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குற்றச்செயலில் ஈடுபட்ட 529 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சட்டவிரோதமாக இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக தகவல் தெரியுமாயின் பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pic courtesy:freepik/kj

மேலும் காண்க:

Whatsapp-ல் வந்தாச்சு chat lock- மற்றவருக்கு தெரியாமல் மெசேஜை மறைப்பது எப்படி?

English Summary: Sale of ration products in black market on april 2023 details Published on: 16 May 2023, 06:18 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.