தக்காளி விலை உயர்வு தொடர்ந்து நீடிப்பதால், முதற்கட்டமாக நாளை முதல் ரேசன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு கோடையில் நிலவிய கடும் வெப்பத்தினால், முன்னர் போதிய விலை கிடைக்காத காரணத்தினாலும் நடப்பு பருவத்தில் விவசாயிகள் தக்காளியினை பயிரிட ஆர்வம் காட்டவில்லை. இதே சமயத்தில் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்ததாலும், கடந்த இரு வாரமாக தக்காளி விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது.
வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100 முதல் ரூ.130 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில் தக்காளி பொதுமக்களுக்கு உரிய விலையில் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, தற்போது அரசின் சார்பில் 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளியானது ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனாலும், வெளிச்சந்தையில் தக்காளி விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதுக்குறித்து மீண்டும் இன்று அரசின் சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு பின், நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:
கடந்த 10 நாட்களாக தக்காளியின் விலை உயர்வாக உள்ளது. அந்த அடிப்படையில் தக்காளியின் விலையை குறைப்பதற்கும், மேலும் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நோக்கிலும் முதல்வரின் ஆலோசனையினை பெற்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். கடந்த வாரம் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.60-க்கு தக்காளியினை விற்பனை செய்து வருகிறோம்.
இந்த விலையேற்றம் குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலும் இதுக்குறித்த தகவலை வழங்கியுள்ளார். பொதுமக்கள் சிரமமின்றி தக்காளியினை பெறுவதற்காக, முதற்கட்டமாக வடசென்னையில் 32 ரேசன் கடைகளிலும், தென் சென்னையில் 25 ரேசன் கடைகளிலும், மத்திய சென்னையில் 25 ரேசன் கடைகளிலும் என மொத்தம் 82 நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளி விற்பனை நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. பண்ணை பசுமை கடைகளிலும், தக்காளி விற்பனை தொடர்ந்து நடைப்பெறும். ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் தேவைக்கேற்ப 50 முதல் 100 கிலோ தக்காளி வரை கிலோக்களில் விற்பனை செய்ய ஆயத்தமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு குறைந்தப்பட்சம் எவ்வளவு தக்காளி கிடைக்கும் என்பது குறித்த தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், கடையிலுள்ள இருப்பினைப் பொறுத்து தக்காளி விற்பனை நடைப்பெறும் என ரேஷன் கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது முதற்கட்டமாக சென்னையில் தொடங்க உள்ளோம். தக்காளியின் விலையினைப் பொறுத்து தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இதனை விரிவுப்படுத்த உள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் தக்காளி விலை கட்டுக்குள் வரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
மெட்ரோ ஆரம்பித்தது முதல் இதுதான் அதிகம்- மாஸ் காட்டிய சென்னை மெட்ரோ
Share your comments