Sathguru Travelling London to Delhi
மண் வளம் காக்க தனது 100 நாள் பைக் பயணத்தை லண்டனில் இருந்து சத்குரு தொடங்கியுள்ளார். 3 கண்டங்களில் 27 நாடுகளை உள்ளடக்கிய 30,000 கி.மீ பயணமாக இது இருக்கும்.
வரலாற்று சிறப்புமிக்க ட்ரஃபல்கர் சதுக்கத்தில் 7 வயது சிறுமி கொடி அசைத்து இப்பயணத்தை தொடங்கி வைத்தார். இதையொட்டி, அங்கு ஏராளமான மக்கள் திரண்டு சவால்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ளும் சத்குரு-வுக்கு வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் சத்குரு உரை நிகழ்த்தினார். மேலும், மற்றொரு பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.
லண்டனில் இருந்து புறப்பட்ட சத்குரு இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிளில் 3 கண்டங்களில் 27 நாடுகளுக்கு பயணித்து இந்தியா திரும்ப உள்ளார். இப்பயணத்தில் அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் வல்லுனர்கள் என பல தரப்பட்ட பிரபலங்களுடன் மண் வள பாதுகாப்பு குறித்து கலந்துரையாட உள்ளார். மேலும், அந்தந்த நாடுகளில் முன்னணி ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுக்க உள்ளார்.
இது தவிர, மே மாதம் ஐவெரி கோஸ்ட் நாட்டில் ஐ.நா-வின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD) நடத்தும் COP 15 என்ற சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளார். இதில் 170-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டிலும் சத்குரு கலந்து கொண்டு உரை ஆற்ற உள்ளார்.
சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்தின் மூலம் உலகம் முழுவதும் சுமார் 350 கோடி மக்களிடம் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் 6 கரீபியன் நாடுகள் தங்கள் நாடுகளில் மண் வளத்தை மேம்படுத்த மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிட்டத்தக்கது.
ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் (UNCCD) ஆய்வின் படி, தற்போது உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2050-ம் ஆண்டிற்குள் உலகில் உள்ள 90 சதவீதம் மண், அதன் வளத்தை இழந்து விடும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகளவில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாகுறை ஏற்பட்டு, பஞ்சம் மற்றும் பட்டினிச் சாவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
விரைவில் இந்தியா விவசாயம் செய்ய முடியாத பூமியாக மாறும்- சத்குரு எச்சரிக்கை!
Share your comments