தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனைத் தடுக்க, காவல் துறையினர் பல முயற்சிகளை எடுத்து வந்த போதிலும், கொலை, கொள்ளை சம்பவங்களை இன்றளவும் தடுக்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இருப்பினும், காவல் துறையினர் முயற்சியை கை விடுவதில்லை. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருட்டு நடந்தாலும், அதனைக் கூடிய விரைவில் கண்டுபிடித்து விடுவார்கள்.
கொள்ளை (Theft)
உலகிற்கே உணவளிக்கும் விவசாயி வீட்டிலும் திருட்டுச் சம்பவம் அரங்கேறி இருப்பது, வருத்தத்தை அளிக்கிறது. தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தின் அருகே, விவசாயி வீட்டின் பூட்டை உடைத்தெறிந்து, தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் முதலியவற்றை, மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருடர்கள் விவசாயியின் வீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வந்த பிறகு தான், இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதுர் அருகே உள்ள கே.இடையப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார் பழனிச்சாமி. முழு நேர விவசாயியான இவர், நேற்று காலையில் தனது வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்று விவசாயப் பணிகளை கவனித்து வந்துள்ளார். பிறகு, மதிய உணவை உண்பதற்காக, பிற்பகல் 2 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார், விவசாயி பழனிச்சாமி. அந்நேரத்தில், வீட்டின் முன் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கதவு திறந்த நிலையில் இருந்ததைக் கண்டு, பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தார்கள்.
40 சவரன் நகை (40 Pown Gold)
தாமதிக்காமல், உடனே வீட்டின் உள்ளே சென்றனர். பிறகு, பீரோ உடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு மேலும் அதிர்த்தி அடைந்தனர். வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து, மர்மநபர்கள் 40 சவரன் நகை மற்றும் ரு. 50,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பழனிச்சாமி, அருகிலுள்ள புழுதிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விவசாயி அளித்த விசாரணையின் பேரில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விவசாயி பழனிச்சாமி, பணமும், நகையும் திரும்ப கிடைத்து விட்டால் போதும், என்ற மனநிலையில் கவலையோடு உள்ளார்.
மேலும் படிக்க
மண்ணின் வளத்திற்கு வண்ணத்துப்பூச்சிகளே சாட்சி!
கீரை விவசாயம்: குறைந்த நாட்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி?
Share your comments