சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் ரூ.24.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகக் கட்டிடம் மற்றும் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.3.2023) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 24 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகம் மற்றும் 1 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
புனரமைக்கப்பட்ட சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய தலைமை கட்டிடம்:
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகக் கட்டடம் தரை மற்றும் ஆறு தளங்களைக் கொண்டதாகும். இக்கட்டடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்து இருந்த நிலையில், பணியாளர்களுக்கும், அங்கு வருகை தரும் பொதுமக்களும் மட்டுமின்றி ஆவணங்களை பராமரிப்பதிலும் சிரமமம் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள 24 கோடியே 92 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
புதுப்பிக்கப்பட்ட இவ்வலுவலகக் கட்டடத்தில், நவீன உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, மின்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டு, அலுவலகத்தின் ஆறு தளங்களும் புனரமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் 100 அமரக்கூடிய வகையில் ஒரு கூட்ட அரங்கும், முதலாவது தளத்தில் வாரியக் குழு கூட்ட அரங்கு மற்றும் 50 பேர் அமரக்கூடிய வகையில் ஒரு சிறிய கூட்ட அரங்கு ஆகியவை மையப்படுத்தப்பட்டுள்ள குளிர் சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அலுவலகப் பகுதி முழுவதும் தீயணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்:
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவித்து, நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய புகார் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு 1 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இன்று தமிழகம் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட இக்கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், 20" x 5" அளவிலான LED திரை நிறுவப்பட்டு, இத்திரையில் குடிநீர் வாரியத்தால் இயக்கப்பட்டுவரும் 40 நீரேற்று நிலையங்களில் லாரிகள் மூலம் நீர் நிரப்பப்படுவது, லாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் வழங்கல் பணிகள், கழிவு நீரேற்று நிலையங்கள், குடிநீர் பகிர்மான நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இம்மையத்தின் மூலம் கண்காணிக்கப்படும். மேலும், குடிநீர் வழங்கும் லாரிகளின் இயக்கம் மற்றும் கழிவு நீரகற்றும் ஜெட்ராடிங் இயந்திரங்களின் இயக்கங்கள் GPS (Global Positioning System- உலகளாவிய நிலைப்படுத்துதல் அமைப்பு) முறையில் கண்காணிக்கப்படும்.
சென்னை குடிநீர் வாரிய நிலநீர் புவியியல் துறை சார்பாக சென்னைப் பெருநகரில் உள்ள 200 வார்டுகளிலும் மின்னணு முறையில் சேகரிக்கப்படும் நிகழ்நிலை நிலத்தடி நீர் பதிவுகள் மற்றும் சென்னைப் பெருநகரில் பெறப்படும் மழையின் அளவை பகுதி அலுவலகங்கள் மற்றும் நீர் பிடிப்புப் பகுதிகளில் உள்ள நிகழ்நிலை மழைமானிகள் இந்த LED திரையின் மூலமாக கண்காணிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் புதிதாக வடிவமைக்கப்பட்ட வலைதளத்தின் சேவையை (https://chennaimetrowater.tn.gov.in) தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர் பெருமக்களை தவிர்த்து, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
Share your comments