TANGEDCO இறுதியாக ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தினை முழு வீச்சில் செயல்படுத்தும் வகையில் டெண்டர் வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக மின்நுகர்வினை துல்லியமாக கணக்கிட 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே ஒன்றிய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தின் கீழ் மானியம் பெற முடியும் என்கிற நிலையில் இந்த டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதுக்குறித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவிக்கையில் “விருப்பமுள்ள ஏலதாரர்களுக்கான பூர்வாங்க கூட்டம் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜூன் 26 ஆம் தேதி முதல் ஜூலை 11 ஆம் தேதி மாலை 3 மணி வரை டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம். ஜூலை 12 ஆம் தேதி ஏலம் டெண்டர் முடிவு வெளியிடப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
முழுத் திட்டமும் மூன்று தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு, ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவும் பணி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும். தற்போது, தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் குடிசைத்தொழில்கள் செய்பவர்களை தவிர்த்து சுமார் 3.34 கோடி நுகர்வோர் இந்த முயற்சியால் பயனடைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார்.
மின் யூனிட் கணக்கிடும் நபர்களுக்கு மாற்றுப்பணி:
தற்போதைய அமைப்பு பற்றி அமைச்சர் பேசுகையில், “மின் யூனிட்டினை கணக்கிடும் நபர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று மீட்டர் ரீடிங் எடுக்கிறார்கள். ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதன் மூலம், நுகர்வோர் தங்கள் நுகர்வுகளை தினசரி மொபைல் போனில் பார்த்து, கட்டணத்தை செலுத்த முடியும். இதன் விளைவாக, மின் யூனிட் கணக்கிடும் மதிப்பீட்டாளர் பதவி நீக்கப்பட்டு, அவர்களுக்கு மின்வாரியத்தில் (TANGEDCO) மாற்று வேலை ஒதுக்கீடுகள் வழங்கப்படும்” என்றார்.
Tangedco அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்மார்ட் மீட்டர்கள் டிஜிட்டல் அளவீடுகளை வழங்குகின்றன மற்றும் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தானாகவே அவற்றின் தகவல்களை அனுப்ப பாதுகாப்பான ஸ்மார்ட் டேட்டா நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது.
எனவே மனித கணக்கீட்டின் போது ஏற்படும் தகவல்கள் இம்முறையில் முற்றிலும் அகற்றப்பட்டு துல்லியமான பில்களை பயனாளர்கள் பெறுவதை உறுதி செய்ய இயலும். மேலும், ஸ்மார்ட் மீட்டர்கள் சர்வர் சிஸ்டம் மூலம் பிழைகளை எளிதாகக் கண்டறியவும் உதவுகின்றன என்றார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது பேக்கேஜ்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை உட்பட 13 மாவட்டங்களில் 1 கோடியே 17 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பயன்படுத்தப்படும். அதனைத்தொடர்ந்து முறையாக இரண்டாவது கட்டத்தில் 1.02 கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், 3-வது கட்டமாக 80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
25 உழவர் சந்தைகளில் புனரமைப்பு பணி- மாவட்ட வாரியாக எந்தெந்த உழவர் சந்தை?
Share your comments