தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டினை முன்னிட்டு நடைபெற்ற சிறுதானிய கருத்துக்காட்சியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் சாந்தி பார்வையிட்டார்.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. சர்வதேச சிறுதானிய ஆண்டிற்கான மையப்பயிராக தமிழ்நாட்டில் ராகி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசினால் தருமபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் சிறுதானிய மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டினை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திலுள்ள மதுராபாய் திருமண மண்டபத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுதானிய கருத்துக்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி நேற்று (27.02.2023) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டவை:
தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தருமபுரி மாவட்டத்தின் மொத்த பரப்பு 3,42,999 ஹெக்டேர் ஆகும். மொத்த சாகுபடி பரப்பான 2,48,421 ஹெக்டேரில், 1,00,545 ஹெக்டேர் நீர்ப்பாசன பயிராகவும், 1,47,876 ஹெக்டேரில் மானாவாரி பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 1,91,080 விவசாயிகள் வேளாண் தொழிலை சார்ந்து வாழ்கின்றனர். அதில் 1,75,794 சிறு குறு விவசாயிகள் (92%), மீதமுள்ள 15,286 விவசாயிகள் (8%) நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் .
மாவட்டத்தில் நடப்பாண்டில் (2022-23) வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் மொத்தம் 2,14,249 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் சோளம் (29,582 ஹெக்டேர்), கம்பு (107 ஹெக்டேர்), ராகி (14,143ஹெக்டேர்), வரகு (21 ஹெக்டேர்), சாமை (4,702 ஹெக்டேர்), மக்காசோளம் (4,963 ஹெக்டேர்) மற்றும் தினை (160 ஹெக்டேர்) ஆகிய தானியங்கள் மொத்தம் 53,678 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1.70 இலட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் வகையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல் விளக்கங்கள், விதை உற்பத்தி மற்றும் விநியோகம், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றம் கருவிகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டக் கலவைகள் ஆகிய இனங்களின் கீழ் மொத்தம் ரூ. 401.65 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிறுதானிய விதைகள் விநியோகத்திற்கு ரூ.4.35 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் அதிகமாக ராகி சாகுபடி செய்வதால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் 2 கிலோ அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்க ஏதுவாக நேரடி ராகி கொள்முதல் நிலையத்தை (21.01.2023 ) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தருமபுரி, அரூர் மற்றும் பென்னாகரம் ஆகிய ஒழுங்கமுறை விற்பனை கூடங்களில் திறந்து வைத்தநிலையில் தற்போது செயல்பாட்டில் உள்ளது.
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக 2023 அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் ஆண்டில் (2023-24) சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் உற்பத்தியை அதிகரித்து மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற சிறுதானிய கருத்துக்காட்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 2 தனியார் நிறுவனங்கள் மற்றும் 1 உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (தலா 500 விவசாயிகள்), தலா 100 விவசாயிகள் கொண்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களிடமிருந்து சிறுதானியங்களில் கேழ்வரகு நீங்கலாக பிற சிறுதானியங்கள், நிலக்கடலை மற்றும் பயிறுவகைகள் நேரடி கொள்முதலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வாங்குவோர்-விற்பனையாளர் சந்திப்பில் (Buyer-Seller Meet) மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் க.விஜயா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஆர்.மாது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை (பொ) வி.குணசேகரன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் கே.மாலினி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுபாடு) தா.தாம்சன், அரசுத்துறை அலுவலர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
மீன்வளத்துறைக்கு ரோந்து படகு வாங்க பிச்சை எடுக்கும் போராட்டம்- மீனவர் சங்கம் அறிவிப்பு
காற்று நம்ம பக்கம் வீசுது சார்.. காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்
Share your comments