திமுக அரசின் மின்கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பும், எதிர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, தமிழகத்தில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக 34 சதவீதம் உயர்த்தி உள்ளார்கள். 12லிருந்து 52 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தியவர்களுக்கு 53 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய ஆட்சி நடக்கும்போது திமுகவினர் எப்படி போராட்டம் நடத்தினார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். மக்களின் உணர்வை புரிந்து நாங்கள் ஆட்சி நடத்தினோம்.
2 ஆண்டு காலம் கொரோனா பாதிப்பு இருந்தது. வேலை வாய்ப்பு இல்லாமல் பொருளாதார சூழ்நிலை மந்தமாக இருக்கும் நேரத்தில், மக்கள் வாழ்வதற்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த மின்கட்டணத்தை உயர்த்துவது முறையா?
கொரோனாவில் 2 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து தற்போதுதான் படிப்படியாக மீண்டு வருகிறோம். இந்த நேரத்தில் மிகப்பெரிய அளவுக்கு மின் கட்டண உயர்வு இருக்கக்கூடாது. அதனால்தான் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக அரசின் மின்கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பும், எதிர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது’ என கூறினார்.
மேலும் படிக்க
Share your comments