திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை லிட், திருவாலங்காடு அரவைக்கு கரும்பு விவசாயிகள் 31.07.2023-க்குள் கரும்பு அரவைக்கு பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருவாலங்காடு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2022-23 ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு 2,11,257 மெ.டன்கள் கரும்பு அரவை செய்யப்பட்டு ஆலையின் சர்க்கரை கட்டுமானம் 8.79 சதவீதம் பெறப்பட்டது.
இது கடந்த 2021-22-ம் ஆண்டை விட 0.73 சதவீதம் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டு அரவைப் பருவத்திற்கு 2.50 இலட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆலையின் அரவை எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காவது வாரத்தில் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பருவத்திற்கு இதுநாள் வரை 7800 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் விவகார எல்லைக்குட்பட்ட திருவள்ளுர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி வட்டங்களில் கரும்பு பயிரிட்டு, இதுநாள் வரை ஆலையின் அரவைக்கு பதிவு செய்யாத விவசாயிகள் அந்தந்த பகுதி கரும்பு அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு 31.07.2023 தேதிக்குள் விடுபடாது பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
நடப்பாண்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 300 ஹெக்டர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனம் மூலம் கரும்பு நடவு செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதத்திலும் அரசு மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு அரசால் நடப்பாண்டு கரும்பு அரவைப் பருவத்திற்கு பதிவு செய்யும் விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டி மருந்து (wild pig Repellent) 1 ஹெக்டேருக்கு 5 லிட்டர் வீதம் 50 சதவீதம் மானிய விலையில் ரூ.2250/-க்கு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 4 முதல் 5அடி பாரில் 1 ஹெக்டேரில் நடவு செய்ய தேவைப்படும் 12500 பருசீவல் நாற்றுகள் 50 சதவீதம் மானியத்தில் ரூ.12,500/- க்கும், கரும்பு சாகுபடியில் உற்பத்தி செலவினை குறைக்கும் வகையில் 1 ஹெக்டேருக்கு 2.5 டன்கள் விதை கரும்பு மட்டுமே பயன்படுத்தி ஒரு பரு விதை கரணை மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.3750/- மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே கரும்பு விவசாயிகள் மேற்குறிப்பிட்ட அனைத்து அரசு திட்டங்களிலும் பயன்பெற உரிய ஆவணங்களுடன் முன்பதிவு செய்யுமாறும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவைக்கு முழுவதுமாக கரும்பு சப்ளை செய்தும் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு பெருக்கு அலுவலரை 9943966322 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
Share your comments