திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார். அதனைத்தொடர்ந்து திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
உலகநாயகன் கமல் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மனோபாலா காலமான செய்தியை கேட்டு மிகுந்த துயரடைந்தேன் என இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், “பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலைத் தெரிவித்து உள்ளார்.
என் மாணவன் மனோபாலா மறைவானது, எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
மறைந்த இயக்குனர் மனோபாலாவிற்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக திரையுலகிற்குள் காலடி எடுத்துவைத்த மனோபாலா 1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரித்ததும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தனது இறுதிக்காலக்கட்டத்தில் பல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: manobala twitter
மேலும் காண்க:
Share your comments