கோவை மாவட்டம் 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் இல்லாத மாவட்டமாக மாறும் என சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கிரீன் க்ளைமேட் கம்பெனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய "கார்பன் நியூட்ரல் கோயம்புத்தூர் பயிலரங்கம்" எனும் நிகழ்வை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் பேசிய அமைச்சர், மாநிலத்திலேயே கார்பன் நியூட்ரல் முயற்சியில் பங்கேற்ற முதல் மாவட்டம் கோவை. மின்சாரம், போக்குவரத்து மற்றும் தொழில்கள் ஆகியவை உலகளவில் கார்பன் வெளியேற்றத்தின் மூன்று முக்கிய ஆதாரங்களாக விளங்குகின்றன.
கார்பன் உமிழ்வைக் குறைக்க, அதிக மின்சார வாகனங்கள், திறந்தவெளிகளில் மரக்கன்றுகள் நடுதல், வனப் பரப்பை அதிகரிப்பது, நகரத்தில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பது மற்றும் புகை மாசைக் குறைக்க தொழிற்சாலைகளை ஊக்குவிப்பது அவசியம். இந்த முயற்சிகள் கோவையில் மேற்கொள்ளப்படும் என்றும், இத்திட்டத்தின் பணி இயக்குனராக மாவட்ட ஆட்சியர் செயல்படுவார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் 3344 தொழிற்சாலைகள் உள்ளதாகவும், அவற்றில் 794 பசுமைத் தொழிற்சாலைகள்( கார்பன் உமிழ்வு குறைவு/பூஜ்ஜியம்) இருப்பதாகவும் அவர் கூறினார். சிவப்பு பிரிவில் இடம்பெற்றுள்ள 584 தொழிற்சாலைகள் குறைந்தது 100 மரக்கன்றுகளையாவது நட வேண்டும். ராமேஸ்வரம் மற்றும் ராஜபாளையம் ஆகிய இரண்டு நகராட்சிகள் கார்பன் நியூட்ரல் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேபோல், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கார்பன் வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், கடந்த ஆண்டு மாவட்டத்தில் பசுமையை அதிகரிக்க சுமார் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும், இந்த ஆண்டு அதிக அளவில் நாட்டு மரக்கன்றுகள் நடப்படும் என்றும் தெரிவித்தார். நீரினை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள், மாவட்டத்தில் உள்ள தென்னை நார் அலகுகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து தண்ணீரை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றார். HACA பகுதிகளில் அமைந்துள்ள செங்கல் சூளைகள் மீது தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் தொடர்பான சொற்களஞ்சியத்தையும் வெளியிட்ட அமைச்சர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார். துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், மாநகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் சுமார் 10 ஏடிஎம்கள் நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு ஆகியோர் உடனிருந்தனர்.
pic courtesy- coimbatore district collector Twit
மேலும் காண்க:
TN கூட்டுறவு வங்கிகளால் விவசாயிகளுக்கு வழங்கிய கடன் எவ்வளவு? தள்ளுபடி எவ்வளவு?
Share your comments