தமிழ்நாடு வனத்துறையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சென்னையில் வனப்பாதுகாவலர் உயர் அதிகாரிகளுடன் தமிழக வனத்துறை அமைச்சர் வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
சென்னை, கிண்டி வேளச்சேரி சாலையில் உள்ள வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (17.03.2023) வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தலைமையில் வரும் சட்டமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டப் பணிகள் குறித்தும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் முன்னேற்றம் மற்றும் வனத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அலுவலகர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தில் நடவு செய்யப்பட்டு வரும் அனைத்து மரக்கன்றுகளும் ஜியோ டேக் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது. இதுவரை 30 ஆயிரம் எக்டேரில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 2021-2023 ஆண்டுகளில் தமிழ்நாடு பசுமை இயக்க திட்டத்தில் மரக்கன்றுகள் வளர்க்கவும், நடவு செய்யவும் இதுவரை ரூ.52.67 கோடி செலவிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் ரூ.96.51 கோடி மதிப்பில் 3 கோடியே 15 இலட்சம் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. நமது பசுமை திட்டத்தில் 96 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து மரக்கன்றுகள் வளர்ப்பதிலும் அவற்றை பாதுகாப்பதிலும் பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதே போல் ஈரநிலம் மேம்பாட்டு திட்டத்தில் 166 ஈரநில நண்பர்கள் குழு பதிவுபெற்று தமிழகத்திலுள்ள ஈரநிலங்களை காப்பதில் வனத்துறையுடன் இணைந்து பங்காற்றி வருகிறார்கள்.
தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தில் 71 ஆயிரத்து 500 எக்டேரில் யூக்கலிப்டஸ், முந்திரி, சவுக்கு போன்ற மரங்கள் வளர்க்கப்பட்டு அதன் முதிர்வு காலத்தில் விற்பனை செய்யப்படுவதன் மூலம் ஆண்டுக்குச் சுமார் ரூ.145 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது. இதனை மேலும் பெருக்குவதற்கு பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் தரமான மரக்கன்றுகள் வளர்க்க இத்துறையின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு முழுவதும் வனச்செயல் திட்டம் அடிப்படையில் வனத்துறை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி நடப்பாண்டு 46 பணிகள் ரூ.3,821.79 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை ரூ.123.83 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் கேம்பா திட்டத்தில் தனியார் காடு வளர்ப்பு திட்டங்களும் வனஉயிரின காப்பகங்கள் மேம்பாட்டுப் பணிகளும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத் தலைவர்) சுப்ரத் மஹாபத்ர, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (கேம்பா) சுதன்ஷு குப்தா, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்/தலைமை வனஉயிரின பாதுகாவலர் சீனிவாஸ் ரா. ரெட்டி, இ.வ.ப., மற்றும் வனத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு வனத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தெரிவித்தார்கள்.
மேலும் காண்க:
பெண்களுக்காக “அவள்” என்கிற புதிய திட்டத்தை தொடங்கிய முதல்வர்- திட்டத்தின் நோக்கம் என்ன?
Share your comments