தமிழக சட்டப்பேரவையில் முத்திரைத்தாள் கட்டண உயர்வு தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் பி.மூர்த்தி தாக்கல் செய்தார். 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு மாற்றி அமைக்கப்படும் முத்திரைத்தாள் கட்டணம் 10 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
நீதித்துறை அல்லாத முத்திரைத்தாள்களை அச்சிடுவதற்கான செலவு எப்போதும் இல்லாத வகையில் பல மடங்கு அதிகரித்துள்ளதால் முத்திரைத்தாள் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்பட்ட போதிலும், வழிகாட்டி மதிப்பு 2017 ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதால் பத்திரப்பதிவு கட்டணம் உயர்ந்தது. இதனிடையே இன்று தமிழக சட்டப்பேரவையில் முத்திரைத்தாள் கட்டண உயர்வு தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் பி.மூர்த்தி தாக்கல் செய்தார்.
முத்திரைத்தாளின் பயன்பாடு என்ன?
முத்திரைத்தாளின் பயன்பாடு இருவருக்கு இடையே பண பரிவர்த்தனை நடக்கும் போது அரசாங்கத்திற்கு வரியாக செல்லும் பணம் முத்திரைத்தாள் வழியாக அரசின் கருவூலத்திற்கு செல்லும். தற்போது முத்திரைத்தாளானது குத்தகை பத்திரம், வீடு கட்டுமான ஒப்பந்தம், பத்திரம், கிரையம், தானம் மற்றும் செட்டில்மெண்ட் பத்திரங்களில் பதிவு கட்டணம் ஆகியவற்றை செலுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வழியாக இருவருக்கும் இடையே பணபரிமாற்றம் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும்.
தமிழக சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவின் விவரங்கள் பின்வருமாறு-
2001-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் நீதித்துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சட்டத்திருத்தத்தின் படி 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது.
இதே போல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் கட்டணம் 500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சட்ட முன்வடிவுக்கு ஆரம்ப நிலையிலேயே சிபிஎம் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்தார். முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு பேரவையில் நிறைவேறியது.
உயர்த்தப்பட்ட முத்திரைத்தாளின் கட்டணத்தினால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டி மதிப்பு மாற்றியமைக்கப்பட்டதால் வழக்கத்தைவிட பத்திரப்பதிவு செலவு அதிகாமி உள்ள நிலையில், முத்திரைத்தாளின் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை அதிகரிக்கும் எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
2,302 கோடி முதலீடு.. 20,000 பேருக்கு வேலை- தமிழக இளைஞர்கள் ஹேப்பி
Share your comments