261 கோடி மரக்கன்று நடத் திட்டம்: வனத்துறை அமைச்சர் அறிவிப்பு, இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு, சேமிப்புக் கிடங்குகள் அமைக்க அரசு நிதி உதவி, குறுவைத் தொகுப்புத் திட்டம் புறக்கணிப்பு: நாகை விவசாயிகள் புலம்பல், கூட்டுறவு வங்கி வாயிலாக ரூ. 1000 உதவித் தொகை வழங்கத் திட்டம் முதலானவைகளைக் குறித்த விரிவான செய்திகள் இப்பதிவு விளக்குகிறது.
மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
261 கோடி மரக்கன்று நடத் திட்டம்: வனத்துறை அமைச்சர் அறிவிப்பு
மாநிலத்தில் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை மாநிலத்தில், 2030 ஆம் ஆண்டுக்குள், 261 கோடி மரக்கன்று நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், கல்லுாரி கனவு திட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர் 2030 ஆம் ஆண்டுக்குள், 261 கோடி மரக்கன்று நடவு செய்யப்பட இருப்பதால் அனைத்து அரசு துறையினரும், மாணவர்களும், மக்களுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
தமிழகத்தில் விவசாயத்திற்கு என இலவசமாக மின் இணைப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த மின் இணைப்பிற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. www.tangedco.gov.in என்ற இணைய தள முகவரியில் விவசாயிகள் தங்களின் தொலைபேசி எண், வீட்டு முகவரி, நிலத்தின் பட்டா, சிட்டா, சர்வே எண், விஏஓ சான்றிதழ் மற்றும் தடையில்லா சான்றிதழைக் கொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
சேமிப்புக் கிடங்குகள் அமைக்க அரசு நிதி உதவி
ஒருங்கிணைந்த வேளாண் விளைபொருள் விற்பனைத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்த, மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. இதனைத் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு மூலம் வழங்கி வருகிறது. எனவே, சேமிப்புக் கிடங்குகள் அமைக்க அரசு நிதி உதவி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறுவைத் தொகுப்புத் திட்டம் புறக்கணிப்பு: நாகை விவசாயிகள் புலம்பல்
காவிரி நீரை மட்டுமே நம்பி குறுவை சாகுபடி மேற்கொள்ளும் நாகை மாவட்ட விவசாயிகளை, குறுவை தொகுப்பு திட்டத்தில், தமிழக அரசு புறக்கணித்துள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர். குறுவைத் தொகுப்புத் திட்டத்தில், நாகை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. ஆனால் நாகை, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், தலை ஞாயிறு,வேதாரண்யம் ஒன்றியங்களை உள்ளடக்கிய நாகை மாவட்டத்திற்கு, 3,000 ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் நாகை விவசாயிகள் மத்தியில் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவு வங்கி வாயிலாக ரூ. 1000 உதவித் தொகை வழங்கத் திட்டம்
அரசு பள்ளிகளில் படித்துக் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகையினைக் கூட்டுறவு வங்கிகள் வழியாக வழங்க, தமிழக அரசு திட்டமிட்டு இருக்கின்றது. இதற்கென மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள், மண்டல இணைப் பதிவாளர்கள் ஆகியோருடன், கூட்டுறவு துறை உயர்திகாரிகள் இன்று 3.30 மணியளவில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
விலங்குகளின் வெப்பத்தைக் கண்டறியும் செயலி தொடக்கம்
மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நாட்டின் முதன்மையான பால் நிறுவனமான ICAR-NDRI-யின் 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ICAR-NDRI-இன் ஓராண்டு காலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். NDRI இன் வரலாற்றைச் சித்தரிக்கும் ஒரு தூணையும், "ஆக்ஸிஜன் பூங்கா"வையும் அந்த நிகழ்வில் தொடங்கி வைத்தார். அதோடு, விலங்குகளின் உமிழ்நீரின் உதவியுடன் விலங்குகளின் வெப்பத்தைக் கண்டறியக் கூடிய “மஹிஷி மித்ரா” செயலியையும் தொடங்கி வைத்தார்.
இந்திய அரசு திட்டமிடல் ஆணையத்தின் விவசாய ஆலோசகர் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை
இந்திய அரசு திட்டமிடல் ஆணையத்தின் முன்னாள் விவசாய ஆலோசகரும், விவசாய விரிவாக்க நிபுணருமான திரு. Dr. V.V சதாமேட் அவர்கள் இன்று கிரிஷி ஜாக்ரன் மீடியா ஹகுஸுக்கு வருகை தந்தார். Dr. V.V சதாமேட் வேளாண் துறையில் 45 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உடையவர். புனே விவசாயக் கல்லூரியில் பட்டம் பெற்றுப் புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IARI) வேளாண்மை விரிவாக்கத்தில் முதுகலை / முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை தந்த அவர், விவசாயம் குறித்த முக்கிய குறிப்புகளை கிரிஷி ஜாக்ரன் குழுவுடன் பகிர்ந்து கொண்டார். உரையின் நிறைவில் ஜூன் மாதத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பெஸ்ட் பர்ஃபாமர் ஆஃப் தி மந்த் அவார்டை வழங்கிச் சிறப்புச் செய்தார்.
இன்றைய வானிலைத் தகவல்கள்
தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெறுவது எப்படி? வழிமுறைகள் இதோ!
பம்ப்செட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு: உற்பத்தியாளர்கள் அச்சம்!
Share your comments