பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும், நமது நாட்டின் தேசிய விலங்காக புலி தான் தொடரும் என்றும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினர் பகீரத் சவுத்ரி சில கேள்விகளை எழுப்பினர். அதில் 'கௌமாதாவினை' (பசு) தேசிய விலங்காக ஒன்றிய அரசு அறிவிக்குமா என கேள்வி எழுப்பினார்.
சௌத்ரியின் கேள்விக்கு ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அளித்த பதில் விவரம் பின்வருமாறு:
இந்திய அரசாங்கம் புலியை 'தேசிய விலங்கு' என்றும், மயிலை 'தேசியப் பறவை' என்றும் நிறுவியது. இவை இரண்டும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை-I விலங்குகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் பசுவினை சேர்க்கும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை எனவும் தெளிவுப்படுத்தினார். கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி, தேசிய விலங்காக புலி, தேசிய பறவையாக மயில் என ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்ப மாற்றம் துறையின் அமைச்சக ஆவணங்களிலும் மறு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தலையிடும் எண்ணம் அரசுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசுகளின் அதிகார வரம்பு:
அலகாபாத் மற்றும் ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றங்கள் 'கௌமாதா'வுக்கு தேசிய விலங்கு அந்தஸ்தை வழங்க உத்தரவிட்டதா அல்லது வலியுறுத்தியதா என்ற கேள்விக்கு, இது போன்ற விஷயங்கள் மாநில சட்டமன்ற அதிகாரிகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று ரெட்டி பதிலளித்துள்ளார்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து பசுக்கள் உள்ளிட்ட உள்நாட்டு கால்நடை இனங்களை பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ”ராஷ்ட்ரிய கோகுல் மிஷனில்” கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை ஈடுபட்டுள்ளது என்றார்.
இந்த முன்முயற்சியின் விளைவாக, நாடு முழுவதும் உள்நாட்டு கால்நடை இனங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. ஒன்றிய அரசின் சார்பில் பசு உள்ளிட்ட விலங்குகளையும், அதன் சந்ததி இனங்களையும் பாதுகாக்க ஏற்கெனவே விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டு அவை முழு வீச்சில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். பசுக்கள் மற்றும் பாரம்பரிய பசு இனங்களை பாதுகாப்பதோடு அவற்றின் எண்ணிக்கையும் உயர்த்துவதே ஒன்றிய அரசு திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே பசு வதைத் தடுப்புச் சட்டம் இந்தியாவின் சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற ஆகஸ்ட் 11 வரை நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
சூரிய சக்தியில் மினி டிராக்டர்- கவனத்தை ஈர்த்த தினை விவசாயி
உரக்கடையில் யூரியா தட்டுப்பாடு- திருச்சி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி
Share your comments