உரம் தெளிப்பதற்காக 40% மானியத்தில் முதற்கட்டமாக 88 ட்ரோன்களை விவசாயிகளுக்கு வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
விவசாயிகள் தங்கள் பயிர்கள் மற்றும் வயல்களைப் பராமரிக்க உதவுவதற்காக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயக் குழுக்கள் மற்றும் சுயஉதவி குழுக்களுக்கு 40 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த மானியமானது தகுதியான விவசாய குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விவசாய பட்டதாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு வாடகைக்கு ட்ரோன்களை வழங்குவார்கள். இந்த முறையின் மூலம், 75 சதவீத மாவட்டங்களின் பெரும் பகுதி குறைந்த நேரத்தில் உரம் தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
வேளாண் துறை இணை இயக்குனர் கிரிஷ் சந்திரா கூறுகையில், “உ.பி.யில் முதல் கட்டமாக 88 ட்ரோன்கள் வழங்கப்படும். ஒரு ட்ரோன் 10 முதல் 12 கிலோ நானோ (திரவ) யூரியா அல்லது பூச்சிக்கொல்லியை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது மற்றும் 10 நிமிடங்களில் எட்டு பிகா நிலங்களில் கரும்பு பயிர்களுக்கு உரங்களை தெளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விவசாய பணிகளில் ட்ரோன்களை பயன்படுத்துவதால் ஒரே நேரத்தில் உற்பத்தி நேரம் மற்றும் செலவு இரண்டையும் வெகுவாக குறைக்க உதவும். கடந்த ஆண்டு பிஜ்னோரின் மண்டவாலி கிராமத்தில், கரும்பு விவசாயத்தில் நானோ யூரியாவின் முதல் வகை சோதனையை விவசாயிகள் மேற்கொண்டனர்.
"விஞ்ஞானிகள் பரிந்துரைத்ததை விட ஐந்து மடங்கு அதிகமாக யூரியாவை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர் மற்றும் அதன் அதிகப்படியான பயன்பாடு மண், காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது" என்று IFFCO இன் தலைமை மண்டல மேலாளர் சைலேந்திர சிங் குறிப்பிட்டிருந்தார்.
உலர் நைட்ரஜன் உரத்தில் 30% மட்டுமே பயிர்களால் உறிஞ்சப்படுகிறது, ஆனால் நானோ யூரியாவைப் பொறுத்தவரை, 86% தாவரங்களால் உறிஞ்சப்பட்டு, ட்ரோன்கள் மூலம் பயிர்களில் எளிதில் தெளிக்கப்படுகிறது. வேளாண் துறை இணை இயக்குனர் ஜே.பி.சௌத்ரி ட்ரோன் வழங்கும் திட்டம் குறித்து கூறுகையில், "டிரோன்கள் ஒவ்வொன்றும் ரூ. 7-10 லட்சம் வரை செலவாகும். தற்போது பயனாளிகளுக்கு அரசு 40% மானியத்தில் வழங்க உள்ளது. விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க முடியும். ட்ரோன்கள் பயன்படுத்தி பயிர்களில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கலாம்."
இதற்கிடையில், ராமபாக்கை சேர்ந்த விவசாயி ரூபேஷ் குமார் கூறுகையில், ''வேளாண் துறை மூலம் ட்ரோன்களுக்கு வழங்கப்படும் மானிய சதவீதத்தை மேலும் அதிகரித்தால் அதிக விவசாயிகள் மேலும் பயனடைவார்கள். அதற்கான நடவடிக்கையினை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்”.
மேலும் காண்க:
மகளிருக்கான இலவச பயண திட்டம்- போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
Share your comments